கடந்த 23-ம் தேதி போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் கொகைன் போதைப் பொருள் வாங்கியது தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் ஸ்ரீகாந்த் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவரவே, அவரை கைது செய்த போலீசார், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வரும் ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் ஸ்ரீகாந்த் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை பெசன்ட் நகரில் கலாஷேத்ரா காலனியில் ராமச்சந்திரா காலையில் உள்ள நடிகர் கிருஷ்ணாவின் குடியிருப்பில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அவரது வீடு கார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வுக்காக போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர். நேற்று காலையில் இருந்து இன்று வரை விடிய விடிய நடிகர் கிருஷ்ணாவிடம் பல்வேறு விதமாக விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
நடிகர் கிருஷ்ணாவின் சமூக வலைதளக் கணக்குகளை ஆய்வு செய்து போதைப் பொருள் தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் உள்ளதா என சைபர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.