கொகைன் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் வெளிநாட்டவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலில், நடிகர் ஸ்ரீகாந்தும் அவர்களிடம் இருந்து போதைப் பொருள் வாங்கியது தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் அவரை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என வாதம் செய்துள்ளார். அவரது ரத்த மாதிரிகளை கொண்டு செய்த ஆய்வின் முடிவில் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. பிறகு அவரை கைது செய்த போலீசார், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
குடும்பத்தில் பிரச்னை இருப்பதாகவும், தனது மகனை கவனித்துக் கொள்ள வேண்டி இருப்பதாலும், தனக்கு ஜாமின் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார் ஸ்ரீகாந்த். குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமின் வழங்க முடியாது எனக் கூறிய நீதிபதி, அவரை ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்னும் இந்த வழக்கில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. கேரளாவில் படப்பிடிப்பில் உள்ள நடிகர் கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.