பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், ஹோமரின் புகழ்பெற்ற கிரேக்க காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘தி ஒடிசி’ திரைப்படம் முதல் வாரத்தில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூலை 17-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ‘தி ஒடிசி’ வெளியானது.  வெளியான ஒரு வாரத்திற்குள்ளாக, இந்தியாவில் இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டின் மிக வெற்றிகரமான ஹாலிவுட் படமாக இது உருவெடுத்துள்ளது.

இப்படம் வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் சுமார் ரூ.20.76 கோடி வசூலித்தது. ஐமேக்ஸ் மற்றும் 3டி திரையரங்குகளில் ரசிகர்களின் ஆதரவுடன் வசூல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘ஓப்பன்ஹைமர்’ படத்திற்குப் பிறகு, கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் இந்தியாவில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டிய மற்றொரு திரைப்படமாக ‘தி ஒடிசி’ இணைந்துள்ளது.

இப்படத்தில் மேட் டாமன் ஒடிசியஸாகவும், ஆன் ஹாத்வே பெனிலோபியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் டாம் ஹாலண்ட், ஜெண்டயா, ராபர்ட் பேட்டின்சன், லுபிதா நியாங்கோ மற்றும் சார்லிஸ் தெரோன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். டிரோஜன் போருக்குப் பிறகு ஒடிசியஸ் மன்னன் தனது தாயகம் திரும்ப மேற்கொள்ளும் 10 ஆண்டுகால சவாலான பயணமே இப்படத்தின் மையக்கரு.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version