நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றும் (ஜூலை 24) எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்தும், டெல்லியில் இளைஞர்கள்  மீதான தடியடி சம்பவம் குறித்தும் விவாதிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் அமளி தொடர்ந்ததால், சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதன் மூலம், மக்களவை தொடர்ந்து 5-வது நாளாக எந்தவித அலுவல் பணிகளும் நடைபெறாமல் முடங்கியுள்ளது.

இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் கூச்சல் குழப்பம் காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை முன்வைத்து கடந்த 4 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்றும் (ஜூலை 24)  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘டிஸ்மிஸ் பிரதான்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி அவர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version