பிரபாஸ், சஞ்சய் தத், ஷரினா வஹாப், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘தி ராஜா சாப்’. மாருதி இயக்கியுள்ள இதை பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி.விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் பைரவி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனனின் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஸ்டைலான தோற்றத்தில் மாளவிகா இருக்கிறார்.
திகில், நகைச்சுவை, டிராமா கலந்து உருவாகியுள்ள இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இதற்கிடையே ‘ஜனநாயகன்’ படத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மாளவிகா மோகனன், “விஜய் சாருடன் ‘மாஸ்டர்’ படத்தில் பணியாற்றியது பெரும் பாக்கியம். அவரை நண்பர் என்று அழைத்துக்கொள்வது அதைவிடப் பெரிய பாக்கியம். அவர் சிறந்த மனிதர். உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களைப் போல, நானும் அவருக்கும் அப்படக் குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
