தென்னிந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடியின் திருமண கொண்டாட்டங்கள் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று (பிப்ரவரி 25) கலைகட்டியுள்ளன. பல ஆண்டுகளாகத் தங்கள் காதலை ரகசியமாக வைத்திருந்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி, கடந்த பிப்ரவரி 22 அன்று சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தனர். ரசிகர்களால் சூட்டப்பட்ட ‘விரோஷ்’ என்ற பெயரையே தங்கள் திருமணத்திற்கு “தி வெடிங் ஆஃப் விரோஷ்” (The Wedding of VIROSH) எனச் சூட்டி அவர்கள் நெகிழ்ச்சியூட்டினர்.
உதய்பூரில் உள்ள ‘தி மெமெண்டோஸ்’ (The Mementos) என்ற பிரம்மாண்ட சொகுசு விடுதியில் இவர்களது திருமணச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. நேற்று (பிப். 24) மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், இன்று ஹல்தி வைபவம் மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்தத் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என சுமார் 50 முதல் 100 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். ஆச்சரியமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தத் தம்பதிக்குத் தனது வாழ்த்து மடலை அனுப்பி கௌரவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
நாளை (பிப்.26) காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் திருமணம் நடைபெற உள்ளது. விஜய்யின் தெலுங்கு கலாச்சாரப்படி ஒரு சடங்கும், ராஷ்மிகாவின் குடகு பாரம்பரியப்படி ஒரு சடங்கும் என இருமுறை இவர்கள் மாலை மாற்றிக்கொள்ள உள்ளனர். இந்தநிலையில் இவர்களது திருமணத்துக்கு விஜய் தேவரகொண்டாவின் தந்தை கோவர்தன் ராவ் பிரதமர் மோடியை அழைத்துள்ளார். ஆனால் அவர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளதால் இவர்களது திருமணத்தில் அவர் பங்கேற்கமாட்டார். இதனால் அவர்களுக்கு வாழ்த்து கடிதத்தை பிரதமர் அனுப்பியுள்ளார். அதில் அவர்களின் திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கவேண்டும், என்றும் வாழ்நாள் முழுவதும் இருவரும் நண்பர்களாக இருக்கவேண்டும் எனவும் அவர் வாழ்த்தியுள்ளார்.
