ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலின் ‘தளபதி கச்சேரி’ லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படம் என்று சொல்லக்கூடிய ‘ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டில், மமீதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், ப்ரியாமணி, நரேன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியானது. பாடலின் துவக்கத்திலேயே ”எங்கண்ணா கச்சேரி.. தளபதி கச்சேரி” என துவங்கி பாடல் ஒலிக்க இசை கச்சேரி ஒன்றில் அனிருத் பாடுவது போல வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. அதில் விஜயின் சிக்னேச்சர் முத்திரை காட்டுவது போலவும், நண்பா நன்றி செல்லம் பாரு.. நம்பிக்கையா சேரு.. காலம் பொறக்குதுடா” என பாடல் துவங்குகிறது.
மேலும், ‘தனக்கென வாழாத தரத்துல தாழாதா ஒருத்தர் வரானே. திருத்திடப் போறானே’ என்ற வரிகள் அனைத்துமே அரசியல் நெடியினை உள்வாங்கிக் கொண்டு பாடல் ஆசிரியர் அறிவு மூலம் எழுதப்பட்டு இருக்கிறது. சேகர் பிஜே சுதன் சிறப்பான முறையில் நடனம் அமைத்திருக்கிறார். சிகப்பு வண்ணத்தில் நடன கலைஞர்கள் நடுவில் விஜய் வெள்ளை சட்டையும், ஊதா நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்து தனியாக தெரிகிறார். பாடலில் பல்லவி முடிந்த பிறகு வருகின்ற பீஜிஎம்மில் விஜய்யின் வெற்றி படங்களான கில்லி, துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், பூவே உனக்காக, நாளைய தீர்ப்பு, லியோ, மெர்சல், மாஸ்டர், சர்க்கார், திருமலை, கோட், நண்பன், காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் உள்ள போஸ்டர்களின் வரைபடங்கள் இடம் பெற்றிருப்பது ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறது.முதல் சரணத்தில் பாடலாசிரியர் அறிவு வேகமாக ரேப் பாடியிருக்கிறார். அந்த இடங்களில் தீபாவளி பட்டாசு வெடிப்பது போல மின்னல் வேகத்தில் வரிகள் நகர்கிறது. அதிலும் குறிப்பாக ‘அவரது கொடி பறக்கட்டுமே’ என்கிற வரிகள் தமிழக வெற்றிக் கழகத்தினை மனதில் வைத்து எழுதியது போல் உள்ளது. மேலும், ‘தளபதிக்கு இந்த பாட்டு, எங்க அண்ணன் போல யாரு காட்டு’ என எழுதி இருப்பது விஜய் ரசிகர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டாம் சரணத்தில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நடிகர் விஜய் அவரது சொந்த குரலில் பாடியிருக்கிறார்.
