ஆந்திராவில் இருந்து கோவைக்குக் 10 கிலோ கஞ்சா கடத்திய சம்பவத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரியில் கோவைக்குக் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை, மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நள்ளிரவில் பறிமுதல் செய்தனர். இந்த மெகா கடத்தல் வழக்கில், பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளி (History Sheeter) உட்பட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு, மே 25ம் தேதி இரவு ஆந்திராவில் இருந்து கோவைக்கு லாரியில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கோவை சுங்கம் – ராமநாதபுரம் ரவுண்டானா பகுதியில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் அதிவேகமாக வந்த TN 34 AF 8910 என்ற பதிவு எண் கொண்ட சரக்கு லாரியை வழிமறித்துச் போலீசார் சோதனையிட்டனர். அப்போது, லாரியின் பின்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் விசாரணையில், லாரியில் வந்தவர்கள் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (29) என்பதும் இவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தின் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. மேலும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அருண்குமார் (30) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாகப்பட்டினத்தில் கஞ்சாவை மிகக் குறைந்த விலைக்கு மொத்தமாக வாங்கி, கோவையில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் நெட்வொர்க் ஏஜென்ட்டுகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய இவர்கள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமானது.
கோவை மாநகர மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், வழக்குப் பதிவு செய்து, மத்திய அரசின் NDPS சட்டப்பிரிவுகள் கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், இருவரையும் கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.
