ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு தலை காதலால் கல்லூரி மாணவியை நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகேயுள்ள மேல் நேத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது மாணவி. தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு பேருந்தில் இருந்து இறங்கி மேல்நேத்தப்பாக்கம் கூட்ரோட்டில் இருந்து தனது தந்தையுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்திய கத்தியால் மாணவியின் கழுத்து, இடதுகை பகுதிகளில் வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்படார்.

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், மாணவியை தாக்கிய கவியரசு என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கல்லூரி மாணவியை 3 ஆண்டுகளாக கவியரசு ஒருதலையாக காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. கவியரசுவை காதலிக்க மறுத்ததால், ஆத்திரத்தில் இந்த தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version