ஏலகிரி மலையில், 2 நாட்களாக நடைபெற்ற கோடை விழா இன்றுடன் இனிதே நிறைவடைந்தது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஏலகிரியில் கோடை விழா நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற விழாவின் நிறைவு நாளான நேற்று (ஜூன் 19) பொதுமக்களின் வருகை வழக்கத்தை விட மிக அதிகமாகக் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்து கோடை விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர்.

சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவின் முக்கிய ஈர்ப்பாக நாய் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றன. இதில் திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து உரிமையாளர்கள் தங்களது வளர்ப்பு நாய்களைக் அழைத்து வந்திருந்தனர். 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான நாய்கள் இப்போட்டியில் பங்கேற்றன.

நாய்களின் உடல் அமைப்பு மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் அவை சிறியது, நடுத்தரம் மற்றும் பெரியது என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்குக் கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

கோடை விழாவையொட்டி அரசுத் துறைகளின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் சிறப்புக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் சிறப்பாக அரங்கம் அமைத்திருந்த பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஆகிய துறைகளின் அரங்குகளுக்குச் சிறந்த அரங்குக்கான நினைவுப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version