தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது அரசு குறித்து அவதூறாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய வழக்கில், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் விஜய் மற்றும் தமிழக அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார்.

சட்டமன்றத்தை கூட்டிப் பார், அப்போது உனக்கு உடலில் எலும்பு இருக்காது என்றும் அதை உடைத்து விட்டுத்தான் அனுப்பி வைப்போம் என்றும் முதலமைச்சர் விஜய்யை குறிப்பிட்டு பேசியதாக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. கைது செய்துவிடுவார்கள் என்று பயந்து கரூரிலிருந்து இரவோடு இரவாக கேராவனில் யாரை வைத்துக்கொண்டு ஓட்டம் எடுத்ததாகவும் அவர் பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய்விட்டதாகவும், 3 வயது குழந்தை முதல் 95 வயது பாட்டி வரை தவெக ஆட்சியில் யாரும் சுதந்திரமாக நடக்க முடியவில்லை என்று திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றம்சாட்டி பேசினார்.  ஊழலின் மொத்த உருவமாகத் முதலமைச்சர் விஜய் திகழ்வாகவும் அவர் பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு அவதூறாகவும், வன்முறையைத் தூண்டும் விதமாகவும் இருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசிய சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவின. இதனைத் தொடர்ந்து, அமைதியைக் குலைக்கும் வகையில் பேசியது, பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை கைது செய்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version