‘ஏரிகளின் மாவட்டம்’ என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடப்பு பருவத்தில் போதிய மழையின்மை, பாசன நீர் தட்டுப்பாடு மற்றும் உரம் தட்டுப்பாடு போன்ற அடுக்கடுக்கான காரணங்களால், பயிரிடப்பட்ட நெற்பயிர்களை கைவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்ட அவளூர், காவந்தண்டலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், இந்த ஆண்டு பருவமழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விதைகளை வாங்கி நெல் பயிரிடும் முதல்கட்டப் பணிகளைத் தொடங்கினர். ஏற்கனவே ஏரிகளில் நீர் சேமிப்பு குறைவாக இருந்தபோதிலும், மழையை மட்டுமே நம்பி சாகுபடியில் இறங்கிய விவசாயிகளுக்கு நடப்பு பருவமழை ஏமாற்றத்தையே தந்துள்ளது.

மழை இல்லாததாலும், கடும் வெயில் காரணமாகவும் முதல்கட்டமாக வளர்க்கப்பட்ட பயிர்கள் அனைத்தும் கருகத் தொடங்கியுள்ளன. இதனால் வேறு வழியின்றி விவசாயிகள் தங்களது நெற்பயிர்களை அப்படியே கைவிட்டுள்ளனர். போதிய நீரின்றி விவசாய நிலங்கள் அனைத்தும் பாலம் பாலமாக வெடித்துக் காணப்படுவது காண்போரின் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய இரண்டு முக்கிய ஆறுகள் மாவட்டத்தின் வழியே சென்றாலும், பருவமழைக் காலங்களில் அவற்றில் ஓடும் உபரி நீர் கிராமப்புற ஏரிகளுக்குச் சென்றடைய முறையான பாசனக் கால்வாய் வசதிகள் இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிர்வாகக் குறைபாடே தங்களின் தற்போதைய அவல நிலைக்குக் முக்கியக் காரணம் என்று அவளூர் கிராம விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இயற்கை பொய்த்த நிலையில், யூரியா போன்ற உரங்களின் இருப்பு இல்லாததும் கூடுதல் சுமையாக மாறியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version