பாமக தலைவர் பதவித் தொடர்பாக ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நிலவுவதும், தேர்தல் ஆணையத்தை இருதரப்பும் நாடியிருப்பதும் அனைவரும் அறிந்ததுதான்.
அதேபோல், தினமும் அறிக்கை வெளியிடுவதிலும் தந்தை, மகன் இடையே போட்டி நிலவுகிறது. அன்புமணி 2 முறை அறிக்கை வெளியிட்டார் எனில், அதே எண்ணிக்கையில் ராமதாஸும் அறிக்கை வெளியிடுகிறார். அன்புமணியின் அறிக்கையில் திமுக அரசு, திமுக மீது கடும் விமர்சனம் முன் வைக்கப்படுவதும், ராமதாஸ் அறிக்கையில் எந்த விமர்சனமும் இல்லாமல், மாநில அரசிடம் கோரிக்கை வைப்பது போல இருப்பதும் வாடிக்கையாக உள்ளது.
இதுபோல தந்தை, மகன் இடையே நிலவும் போட்டியால், 2026 தேர்தலில் பாமக எந்தக் கூட்டணியில் இடம்பெறும், யாரை ஆதரிக்க வேண்டும் என பாமக தொண்டர்கள் இடையே குழப்பம் நிலவுகிறது. ராமதாஸை ஆதரிப்பதா, அன்புமணியை ஆதரிப்பதா என தெரியாமல் பல பாமக நிர்வாகிகள் உள்ளனர். இதற்கு தேர்தலுக்கு பிறகு, தந்தையும், மகனும் சேர்ந்து விட்டால், தாங்கள் பழிவாங்கபடுவோமோ என்ற சந்தேகமும் ஒரு காரணமாகும்.
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் கூறுகையில், “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ராமதாஸும், அன்புமணியும் தனித்தனி கூட்டணியில் இடம்பெறுவர். அன்புமணி தரப்பு பாஜக கூட்டணி அல்லது விஜய் கூட்டணியில் இணையக்கூடும். ராமதாஸ் தரப்பு திமுகவுடன் கூட்டணி வைக்கக்கூடும்.
கருத்து வேறுபாடு தீராமல், பாமகவின் மாம்பழ சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கும்பட்சத்தில், அதற்கும் 2 தரப்பும் தனித்தனியே திட்டம் வைத்துள்ளனர்.
இந்த மோதல் எல்லாம் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடியும் வரைதான். 2026 தேர்தல் முடிந்ததும், ராமதாஸூம், அன்புமணியும் சேர்ந்து விட அதிக வாய்ப்பு உள்ளது. அல்லது குடும்பத்தினர் சென்டிமென்ட் பேசி, அவர்கள் 2 பேரையும் சேர்த்து வைத்து விடுவர். இதை அறிந்துதான், பாமக நிர்வாகிகள் பலர் இன்னும் தங்களின் நிலைப்பாட்டை எடுக்காமல் உள்ளனர். தந்தை, மகன் நடத்தும் 2 ஆர்ப்பாட்டங்களிலும் பாமக நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொண்டு வருகின்றனர்” என்றனர்.
