2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெகவுடன் சீமானின் நாதக கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பில்லை என ஏற்கெனவே உறுதியாகி விட்டது. இதற்கு முதல்வர் வேட்பாளர் தாங்களே என விஜய்யும், சீமானும் உறுதியாக இருந்ததே காரணமாக சொல்லப்படுகிறது.

அதேபோல், 2026 தேர்தலில் தவெகவும், நாதகவும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் தனித்தனி அணியாகவே போட்டியிடவுள்ளன. இதனால் 2026 தேர்தலில் திமுக அணி, அதிமுக அணி, தவெக அணி, நாதக அணி என்று 4 முனை போட்டி நிலவும் என கூறப்படுகிறது.

தவெக தலைவர் விஜய் கிறிஸ்தவர்கள் அதிகமுள்ள தென்மாவட்ட தொகுதி அல்லது நாகை மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடவே அதிக வாய்ப்பிருப்பதாகவும், ஏற்கெனவே தொகுதியை விஜய் இறுதி செய்து, பூர்வாங்கப் பணியை தொடங்கி விட்டதாகவும் தவெக மூத்தத் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரத்தில், கூட்டணி இல்லை என உறுதியாகி விட்டதால், விஜய்யுடன் சட்டப்பேரவைத் தேர்தலில் நேருக்கு நேர் மல்லுக்கட்டி தனது பலத்தை நிரூபிக்க சீமான் விரும்புவதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டியிட்டால், திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி தன்னை மறைமுகமாக ஆதரிக்கும் எனவும், தேர்தல் செலவுக்கு இருதரப்பும் நிதி அளிக்கக்கூடும் என்றும் சீமான் கருதுவதாகவும், தாம் போட்டியிடும் தொகுதி பெயரை விஜய் அறிவிப்பதற்காக சீமான் காத்திருப்பதாகவும் அவரது கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

சீமானின் அரசியல் மூவ் அனைத்தும் விஜய்க்கும் நன்றாக தெரியும், அதனாலேயே சீமானின் விமர்சனத்திற்கு விஜய் பதிலளிப்பதில்லை என தவெக மூத்த தலைவர்கள் கூறுகின்றனர். தலையுடன்தான் மோத வேண்டும், வாலுடன் மோதக் கூடாது என சீமானை விஜய் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்றும் தவெக மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version