ஈரோடு மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான கோபிசெட்டிபாளையத்தில், தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் செங்கோட்டையன் அபார வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே முன்னிலையில் இருந்த அவர், இறுதி நிலவரப்படி மொத்தம் 71,380 வாக்குகள் பெற்று தனது வெற்றியை உறுதி செய்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முக்கிய வேட்பாளரை சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கோபிசெட்டிபாளையத்தை தவெக-வின் வெற்றிக் கோட்டையாக மாற்றியுள்ளார்.
பல ஆண்டுகளாகப் பெரிய கட்சிகளின் செல்வாக்கு நிறைந்த தொகுதியாகக் கருதப்பட்ட கோபிசெட்டிபாளையத்தில், தவெக நிகழ்த்தியுள்ள இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தவெக தொண்டர்கள் கோபிசெட்டிபாளையம் நகர் முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது வெற்றிக் கொண்டாட்டத்தைக் களைகட்டச் செய்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் கொங்கு மண்டலத்திலும் தவெக தனது பலத்தை வலுவாகப் பதிவு செய்துள்ளது.
