தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் அர்லேகர் இன்று உரையாற்றிய நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆளுநர் உரை குறித்த தனது கருத்தை வெளியிட்டுள்ளது.
ஆளுநரின் உரை குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் உள்ளிட்ட அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்கப்பட்ட மரபு மீறல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வழக்கம் போல முதலிடம் பெற்றது. பேரவை மரபு நிலை நாட்டப்பட்டதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
தமிழ்நாடு நீண்ட காலமாக கடைப்பிடித்து வரும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை தொடர்ந்து உறுதியாக முன்னெடுக்கப்படும் என அறிவித்திருப்பதும், இந்தி மொழியை திணிப்பதன் மூலம் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த நிர்பந்தித்து வருவதையும், இதன் அடிப்படையில் தமிழக கல்வித் துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.3,458 கோடியை நிறுத்தி வைத்திருப்பது சரியல்ல என ஆளுநர் உரை விமர்சித்துள்ளது.
எனினும் புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்படும், தொழில் வணிகம் எளிமையாக்கப்படும் (EASE OF DOING BUSINESS), என உறுதியளிக்கும் ஆளுநர் உரையில், தொழிலாளர் நலன், சட்ட உரிமைகள், கண்ணியமான வாழ்வுக்கான ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஒரு வார்த்தை கூட ஆளுநர் உரையில் இல்லை என்பதும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகள் குறித்தும் ஆளுநர் உரை அமைதி காத்திருப்பதும் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
ஐந்து ஏக்கர் வரை நிலம் உள்ள சிறு, குறு விவசாயிகளின் பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதிக்கு மாறாக, கடன் தொகை அளவை அடிப்படையாகக் கொண்டு ரூ.75 ஆயிரம் வரையான கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளுக்கு முழு நிவாரணம் அளிக்காது என்பதை கருத்தில் கொண்டு மறு பரிசீலனை செய்து, தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அக்கறை காட்டும் ஆளுநர் உரையில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அமைப்பு சாரத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிப்பதாக அமைந்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
