திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் திறமை, ஒழுக்கம் மற்றும் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒரு நாள் “மாணவ தலைமை ஆசிரியர்” பொறுப்பு வழங்கும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு ‘ஆ’ பிரிவில் பயிலும் கோகுல்ராஜ் மற்றும்  ஹர்ஷந்த் ஆகியோர் ஒரு நாள் தலைமை ஆசிரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பள்ளியின் செயல்பாடுகளைக் கவனித்து வருகின்றனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில்,  எங்கள் பள்ளியில், மாணவர்களின் கல்வி ஒழுக்கம் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு திறமைகளை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை இது போன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தலைமை ஆசிரியராக ஒரு நாள் பணியாற்றுவார்கள்.

தற்போதைய சூழலில் எங்கள் பள்ளியில் பொதுமக்கள் காலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள அரசு அனுமதித்துள்ளது. ஆனால், பலர் காலை 8:30 மணி வரை மைதானத்திலேயே இருப்பதால் மாணவர்களின் உடற்பயிற்சிச் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பிட்ட வயதில் மாணவர்கள் மன அழுத்தம் காரணமாகப் போதைப்பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க, வாரத்தில் ஒரு நாள் கூட்டு உடற்பயிற்சி (Mass Drill) கட்டாயம் நடத்தப்பட வேண்டும். கல்விக்குத் தரும் அதே முக்கியத்துவத்தை உடற்பயிற்சிக்கும் தர வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்திற்குத் தொழில்நுட்ப அறிவு மிகவும் முக்கியம் என்பதால், கணினியைக் கையாள்வது மற்றும் அதன் அடிப்படைக் கூறுகள் குறித்த பயிற்சிகளை இன்னும் விரிவாக வழங்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்களாக இன்று வகுப்பறைகளை ஆய்வு செய்தபோது, பெரும்பாலான மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித வாய்ப்பாடுகளில் சிறந்து விளங்குவதையும், ஒரு சில மாணவர்கள் சற்றே சிரமப்படுவதையும் கண்டறிந்தோம்.

இதனைச் சரிசெய்ய, மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு 1:00 மணி முதல் 1:20 மணி வரை உள்ள நேரத்தில், வகுப்பறைத் தலைவர்கள் (Class Leaders) மூலம் மாணவர்களை ஒருங்கிணைத்து தமிழ், ஆங்கிலம் வாசிப்புப் பயிற்சி மற்றும் 2 முதல் 16 வரையிலான வாய்ப்பாடுகளைத் திரும்பத் திரும்பக் கூறச் செய்து அன்றாடம் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும், காலை வழிபாட்டுக் கூட்டத்தின்போது (Prayer), மாணவர்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைத் தைரியமாகத் தெரிவிப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்களின் இந்தத் தலைமைப் பண்பும், பொறுப்புணர்வும் மற்ற மாணவர்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகக் கருதப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version