மெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் 100 நாட்களுக்கும் மேலான தொடர் வான்வழித் தாக்குதல்கள், முக்கிய ராணுவ மற்றும் அரசியல் தலைவர்களின் படுகொலைகள், உள்கட்டமைப்பு அழிப்புகள் மற்றும் கடுமையான எண்ணெய் வர்த்தக முடக்கங்களுக்குப் பிறகும் ஈரான் இன்னும் தாக்குப்பிடித்து நிற்பது உலக நாடுகளை வியப்புடன் உற்று நோக்க வைத்துள்ளது.

போர் காரணமாக ஈரான் சுமார் 347 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்துள்ளதுடன், இந்த ஆண்டு அதன் பொருளாதாரம் 6.1 சதவீதம் சுருங்கும் என ஐநா கணித்துள்ளது. இருப்பினும், ஈரானின் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடாமல், தன் ராணுவத்திற்கும் மக்களுக்கும் தேவையானவற்றை அது எவ்வாறு தொடர்ந்து வழங்கி வருகிறது? அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என்படு குறித்து விரிவாக பார்க்கலாம்.

10 ஆண்டு கால அனுபவம்

ஈரான் பொருளாதார நெருக்கடிகளைப் புதிதாக எதிர்கொள்ளும் நாடு அல்ல. பல தசாப்தங்களாகப் போர், பொருளாதாரத் தனிமைப்படுத்தல் மற்றும் சர்வதேசத் தடைகளை எதிர்கொண்ட நீண்ட அனுபவம் அதற்கு உண்டு. குறிப்பாக, 2013-ஆம் ஆண்டில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அறிமுகப்படுத்திய ‘பொருளாதார எதிர்ப்பு’ (Economic Resistance) என்ற கொள்கை இதற்கு முக்கிய அடித்தளமாக அமைந்தது. உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவது மற்றும் இறக்குமதிச் சார்ந்து வாழும் நிலையைக் குறைப்பதுமே இதன் நோக்கம். வெளிநாட்டுப் பொருட்கள் மீதான கடுமையான வரிகள் உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் காப்பாற்றியதுடன், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தனிமைப்படுத்தலில் இருந்து ஈரானைப் பாதுகாக்கும் கேடயமாகவும் மாறியது.

ரகசிய கப்பல் படை

பிப்ரவரி மாத கூட்டுத் தாக்குதலுக்குப் பிறகு, உலகின் ஐந்தில் ஒரு பங்கு எரிபொருள் வர்த்தகம் நடைபெறும் முக்கிய கடல் பகுதியான ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ (Strait of Hormuz) ஈரான் மூடியது. இது ஈரானின் சொந்த எண்ணெய் ஏற்றுமதியைப் பாதிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே ஈரான் தனது எண்ணெய் ஏற்றுமதியைத் தீவிரப்படுத்தி, பெருமளவிலான வருவாயைச் சேமித்து ஒரு பாதுகாப்பான ‘பஃபரை’ (Buffer) உருவாக்கியிருந்தது. மேலும், தடைகளைத் தகர்க்க ஈரான் ‘டார்க் ப்ளீட்’ (Dark Fleets) எனப்படும் ரகசியக் கப்பல் படைகளைப் பயன்படுத்துகிறது. இந்தக் கப்பல்கள் தங்களின் இருப்பிடத்தைக் காட்டும் டிரான்ஸ்பாண்டர்களை (Transponders) அணைத்துவிட்டு, நடுவழிக் கடலில் மற்றொரு கப்பலுக்கு எண்ணெயை மாற்றி ரகசியமாக வர்த்தகம் செய்கின்றன. அத்துடன், போலி ஷெல் நிறுவனங்களின் (Shell Companies) வலையமைப்பைக் கொண்டு பணப் பரிவர்த்தனைகளையும் ஈரான் சாதுரியமாக மேற்கொள்கிறது.

மாற்று வர்த்தக பாதை

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால், ஈரான் தனது வர்த்தகப் பாதையை மாற்றியமைத்தது. விவசாயம், எஃகு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குக் கடுமையான உள்நாட்டுத் தடைகளை விதித்த அரசு, ஹார்முஸ் ஜலசந்தியைச் சாராத பிற துறைகளின் ஏற்றுமதியை ஊக்குவித்தது. குறிப்பாகப் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடனான நிலவழி வர்த்தகம் மற்றும் மத்திய சீனாவுக்கான ரயில் வழிச் சரக்கு போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யப் பயன்படும் வடக்குத் துறைமுகங்கள் மூலமும் வர்த்தகம் தடையின்றி நடைபெறுகிறது.

தற்போதைய பொருளாதார பாதிப்புகள்

இருப்பினும், ஈரானின் தற்போதைய நிலைமை அத்தனை சீராக இல்லை.போரினால் ஏற்பட்ட உள்கட்டமைப்பு சேதங்கள் ஈரானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான (GDP) 300 பில்லியன் டாலரை விட அதிகமாக, அதாவது 347 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஈரானிய நாணயமான ‘ரியால்’ எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.பணவீக்கம் 77 சதவீதத்தைக் கடந்துவிட்டதால், மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து, புத்தகங்கள் வாங்குவது முதல் டாக்ஸி பயணம் வரை அனைத்திற்கும் தவணை முறை பயன்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.போர்ச் சூழலால் கிட்டத்தட்ட 10 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. ஈரானிய மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் (சுமார் 41 லட்சம் மக்கள்) சர்வதேச வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்படும் நிலை காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

தாங்கிப் பிடிக்கும் வியூகங்கள்

இத்தகைய பொருளாதார நெருக்கடியால் மக்கள் மத்தியில் உள்நாட்டுப் போராட்டங்கள் வெடிக்க அதிக வாய்ப்புகள் இருந்தாலும், ஈரானில் ‘ஆட்சி மாற்றம்’ ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றே சர்வதேச நிபுணர்கள் கருதுகின்றனர். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல்படை’, அரசு அதிகாரத்தை இன்னும் தன் இரும்புப் பிடிக்குள் வைத்துள்ளது. இரண்டாவதாக இந்தத் தீவிரமான போர்ச் சூழல், ஈரானிய மக்கள் மத்தியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான கோபத்தையே அதிகரித்துள்ளதே தவிர, அது சொந்த அரசுக்கு எதிரானதாக மாறவில்லை.

இந்த நிலையில், பத்தாண்டு காலத் தடைகளைத் தாங்கிப் பழகிய ஈரானின் ‘அனுபவப் பொருளாதாரம்’ மற்றும் மாற்று வர்த்தக வியூகங்கள்தான் 100 நாட்களைக் கடந்த போரிலும் அதைத் தாங்கிப் பிடிக்கின்றன. எனினும், போர் நிறுத்தத்திற்குப் பிந்தைய ஈரானின் மறுசீரமைப்பிற்குப் பல பில்லியன் டாலர் முதலீடுகள் தேவைப்படும் என்பதால், அதன் எதிர்காலப் பொருளாதாரப் பாதை இன்னும் சவால்கள் நிறைந்ததாகவே இருக்கும்.

– பா. முகிலன்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version