மென்பொருள் நிறுவனங்களின் மையமான ஹைதராபாத்தின் மாதப்பூர் ஐடி காரிடாரில், வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை இயக்கிக்கொண்டே, பெட்ரோல் டேங்க் மீது லேப்டாப்பைத் திறந்து வைத்து வேலை செய்துகொண்டே பயணித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹைடெக் காமன் (Hitex Kaman) பகுதி அருகே காரில் சென்ற பயணி ஒருவர் இந்த ஆபத்தான காட்சியைத் தன் மொபைலில் படம்பிடித்துள்ளார். அந்த வீடியோவில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வாலிபர் ஒருவர் பைக் ஓட்டுகிறார். அவரது பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது லேப்டாப் திறந்த நிலையில் உள்ளது,  டிராஃபிக்கை கவனித்துக் கொண்டே அவர் லேப்டாப்பிலும் வேலை பார்ப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://x.com/NishadIndra1/status/2065459553450577963?

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் இதனை ‘வொர்க் ஃபிரம் பைக்’ என்றும், ‘கார்ப்பரேட் அடிமைத்தனத்தின் உச்சக்கட்டம்’ என்றும் சாடி வருகின்றனர். இந்த வீடியோவிற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான காரசாரமான கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

அவர் தன் உயிரை மட்டுமல்ல, சாலையில் செல்லும் மற்றவர்களின் உயிரையும் பணயம் வைக்கிறார்” என்று ஒருவர் சாடியுள்ளார். “இன்றைய நவீன கார்ப்பரேட் வேலைகளின் அவல நிலை இதுதான்” என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

நாராயண மூர்த்தியின் ’70 மணி நேர வேலை’ கருத்தைக் கிண்டல் செய்யும் விதமாக, “வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்ற இலக்கை முடிக்கத் தான் பாவம் அவர் இப்படி செய்கிறார் போல!” என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.

பைக் ஓட்டும்போது லேப்டாப் பயன்படுத்துவது கவனச்சிதறலை ஏற்படுத்தி, மிக மோசமான உயிரிழப்பு விபத்துகளுக்கு வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்திலும் இதேபோல் ஒரு இளைஞர் பைக் ஓட்டி கொண்டே லேப்டாப் பயன்படுத்திய வீடியோ வெளியானது. அதேபோல, மற்றொரு வீடியோவில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த பெண் ஒருவர் லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டே சென்றதும் குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்ப நகரங்களில் அதிகரித்து வரும் இந்த ஆபத்தான கலாச்சாரத்தைத் தடுக்க, போக்குவரத்து போலீசாரும், கார்ப்பரேட் நிறுவனங்களும் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version