இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக நிலவும் பகைமையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று இரு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் 117 பேர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு திறந்த கடிதம் எழுதியுள்ளனர். இந்த முயற்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
1947-ல் பிரிவினைக்குப் பிறகு இரு நாடுகளும் தொடர்ந்து மோதல்களை எதிர்கொண்டு வருகின்றன. காஷ்மீர் பிரச்சினை, பாகிஸ்தான் தரப்பில் இருந்து வரும் பயங்கரவாத ஆதரவு மற்றும் தொடர் தாக்குதல்கள் ஆகியவை உறவை மோசமாக்கியுள்ளன. கடந்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது. அதனைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத முகாம்களைத் தாக்கியது. இந்த மூன்று நாள் மோதலுக்குப் பிறகு பாகிஸ்தான் பின்வாங்கியது. ஆனாலும், பாகிஸ்தான் தரப்பில் இருந்து அணு ஆயுதம், இரத்த ஆறு போன்ற மிரட்டல்கள் தொடர்கின்றன. இதனால் இருதரப்பு உறவு இன்னும் பதற்றமாகவே உள்ளது.
இந்நிலையில், ‘அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான மையம்’ (Centre for Peace and Progress) சார்பில் வெளியிடப்பட்ட இந்தக் கடிதத்தில் இந்தியாவிலிருந்து 61 பேரும், பாகிஸ்தானிலிருந்து 56 பேரும் கையெழுத்திட்டுள்ளனர். இந்தியத் தரப்பில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பாரூக் அப்துல்லா, மிர்வாஸ் உமர் பரூக், மெகபூபா முப்தி, ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா, ஹிமாயுன் கபீர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மஹ்முத் கசூரி, தூதரக அதிகாரி அஷ்ரப் ஜஹாங்கீர் காசி, எம்பி இஸ்பான்யார் பாந்த்ரா போன்றோர் உள்ளனர்.
கடிதத்தில், “இந்தியா-பாகிஸ்தான் மக்கள் தொகை உலகின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு. பெரும்பாலானோர் இளைஞர்கள். மோதல்களுக்கு பதிலாக அமைதி, வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை நோக்கி நகர வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக நீடிக்கும் பகைமை சமூகப் பொருளாதார இழப்புகளுடன் உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் கட்ட நடவடிக்கையாக தூதரக உறவை மீட்டெடுக்க வேண்டும், தூதர்களை நியமிக்க வேண்டும், விசா சேவைகளைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், நல்வாழ்வும் கிடைக்கும். ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளை 2004-2007 காலகட்டத்தில் பின்பற்றிய முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். ராணுவக் குறைப்பு, பதற்றம் தணிப்பு நடவடிக்கைகள், அட்டாரி-வாகா எல்லையைத் திறப்பது, ஸ்ரீநகர்-முசாஃபராபாத் பேருந்து சேவை, விமானப் போக்குவரத்து ஆகியவற்றை மீட்டெடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
தெற்காசியாவில் பிரிவினை மற்றும் மோதலுக்கு பதிலாக அமைதி, செழிப்பு மற்றும் கூட்டு வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும் என்று கடிதம் வலியுறுத்துகிறது. இந்த அழைப்பு எந்த அரசியல் நிலைப்பாட்டையும் ஆதரிப்பதல்ல; சுமார் 200 கோடி மக்களின் எதிர்கால நலனை மனதில் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் இரு நாட்டு மக்களிடையேயும் அமைதி விருப்பத்தை பிரதிபலிக்கிறது என்றாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு தொடரும் என்பது தெளிவு. பேச்சுவார்த்தைக்கு பயங்கரவாத ஆதரவை நிறுத்துவது அடிப்படை என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்த முயற்சி எதிர்கால உறவுகளுக்கு புதிய வாய்ப்பை உருவாக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
