சென்னை மாநகராட்சி (GCC) அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) மேற்கொண்ட திடீர் சோதனைகளில் ஊழலுக்கான ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில் 15 மாநகராட்சி அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது…
திரு.வி.க. நகர் மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை நடத்தி, செயற்பொறியாளர் ஆர். சரவணன் மற்றும் 74-வது வார்டில் (மேயர் ஆர். பிரியா பிரதிநிதித்துவம் செய்யும் வார்டு) பணியாற்றிய உதவி பொறியாளர் டி. சரஸ்வதி மீது வழக்குப் பதிவு செய்தது. இதனை அடுத்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்…
இதேபோல், உதவி செயற்பொறியாளர் (நகரமைப்பு) ரவிவர்மன், இளநிலை உதவியாளர் மணிகண்டன், கண்காணிப்பாளர் (கணக்கு) ஏ. ஸ்ரீராமுலு, சுகாதார அலுவலர் ஏ. மஞ்சித், தூய்மைப் பணிகள் ஆய்வாளர் ஆர். கோதண்டன், உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 15 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
