மாணவர் போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட சிறுமி, தற்போது கைகூப்பி மன்னிப்பு கோரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “போராட்டத்தில் சிலரின் தூண்டுதலால் பிரதமர் குறித்து மிகவும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தினேன். எனக்கு இப்போது அதற்காக மிகுந்த வருத்தமாக உள்ளது” எனக் கூறும் சிறுமி,
“எனக்கு வெறும் 15 வயதுதான். நான் செய்தது மன்னிக்க முடியாத தவறு. இது என்னுடைய முதல் மற்றும் கடைசி தவறு. நாடு முழுவதுமுள்ள மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். எனது செயலுக்காக மிகவும் வெட்கப்படுகிறேன். தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், அவர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR) வயது 25 என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், மன்னிப்பு வீடியோவில் தனக்கு 15 வயது மட்டுமே என சிறுமி கூறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த புதன்கிழமை, மாணவர் போராட்டத்தின் போது பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக நொய்டா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நொய்டா போலீசார் ஜீரோ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, பின்னர் அந்த வழக்கை டெல்லி பாராளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு மாற்றினர்.
புகாரில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததுடன், சமூகத்தில் அமைதிக்கேடு மற்றும் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அந்த பேச்சு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த மன்னிப்பு வீடியோ வெளியாகும் சில மணி நேரங்களுக்கு முன்பே, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் தன்னை நோக்கியும், தனது மறைந்த தாயை நோக்கியும் முன்வைக்கப்பட்ட அவதூறு முழக்கங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், “அவதூறு வார்த்தைகளால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கிடையாது. தவறான பாதைக்கு சென்ற இளைஞர்களை தண்டிப்பதை விட, அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்ட குழந்தைகள். அவர்களை நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்வதும், தொந்தரவு செய்வதும் தீர்வல்ல. நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன்; சமூகமும் அவர்களை மன்னித்து நல்ல பாதைக்கு வழிநடத்த வேண்டும். நாம் அனைவரும் இணைந்து இந்தியாவுக்காக உழைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
