ஜூன் 12, 2025… இந்தியாவே உறைந்துபோன அந்த கருப்பு நாள்! அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையம் நோக்கி, 242 பயணிகளுடன் கம்பீரமாகப் புறப்பட்டது ஏர் இந்தியாவின் AI171 போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். ஆனால், புறப்பட்ட அடுத்த 32-ஆவது விநாடி… யாரும் எதிர்பாராத அந்தப் பேராபத்து நிகழ்ந்தது. வானில் பறக்க வேண்டிய விமானம், தரைமட்டமாகிக் கிடந்தது.

விமானத்தில் இருந்த 241 பேர், தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 உயிர்கள் நொடிப்பொழுதில் காற்றில் கரைந்து போயின. இன்றுடன் இந்தத் துயரம் நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்ட நிலையிலும்… “அன்று அங்கு என்ன நடந்தது?” என்ற கேள்விக்கான விடை மட்டும் இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது.

விபத்து குறித்துப் புலனாய்வு செய்த இந்தியாவின் ‘விமான விபத்து விசாரணைப் பிரிவு’ (AAIB), கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது. அதில் அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் வெளியாகின. விமானம் டேக்-ஆஃப் ஆன சில விநாடிகளிலேயே, காக்பிட்டில் இருந்த இரண்டு ‘ஃப்யூல் கன்ட்ரோல்’ (Fuel Control Switches) சுவிட்சுகளும், ‘ரன்’ நிலையிலிருந்து ‘கட்-ஆஃப்’ நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் இன்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் உடனடியாக நின்று, விமானம் தனது வேகத்தை இழந்து, பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தின் மீது மோதி நொறுங்கியுள்ளது.

விமானத்தின் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகியிருந்த அந்த கடைசி விநாடி உரையாடலில், ஒரு பைலட் கேட்கிறார், “ஏன் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தினாய்?” அதற்கு மற்றொரு பைலட் பதறுகிறார், “நான் அதைச் செய்யவில்லை! என்று கூறியது கேட்பவர் நெஞ்சைப் பதற வைக்கிறது.  மறுநொடியே எல்லாம் முடிந்துவிட்டது. தற்செயலாக இந்த சுவிட்சுகள் மாற வாய்ப்பில்லை என்றும், இது திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என்றும் விமான போக்குவரத்து நிபுணர்கள் சந்தேகிக்கிறார்கள். ஆனால், இறுதி அறிக்கை இன்னும் வராததால், இந்த விபத்துக்குப் பைலட்டுகளின் தவறான முடிவா, தொழில்நுட்பக் கோளாறா, அல்லது இன்ஜின் குறைபாடா என்ற குழப்பம் நீடிக்கிறது.

இந்த விபத்தில் உயிரிழந்த கேப்டன் சுமீத் சபர்வால், 15,600 மணி நேரத்திற்கும் மேல் விமானத்தை இயக்கிய மிக அனுபவம் வாய்ந்த பைலட். துணை பைலட் கிளைவ் குந்தரும் தகுதியான ஒரு அதிகாரிதான். இப்படிப்பட்ட திறமையான பைலட்டுகள் இருந்தும் இந்த விபத்து எப்படி நடந்தது? ஜிஇ ஏரோஸ்பேஸ் (GE Aerospace) இன்ஜின்களின் இறுதிப் பரிசோதனை இன்னும் முடியாததால், அதிகாரப்பூர்வ அறிக்கை தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

ஆண்டுகள் உருண்டோடினாலும், அன்பானவர்களைப் பறிகொடுத்துவிட்டு, விடை தெரியாத கேள்விகளோடு காத்துக்கிடக்கும் அந்த 260 குடும்பங்களின் கண்ணீருக்கு எப்போதுதான் நீதி கிடைக்கும்? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version