மத்திய அரசுக்கு எதிராக நாளை நாடு முழுவதும் மருந்துக்கடைகள் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், 5000 மருந்துக்கடைகள் திறந்திருக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கத்தின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் நாளை மருந்துக் கடைகள் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளன. இதனால்  நாடு முழுவதும் பனிரெண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைக்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் உள்ள 42ஆயிரம் மருந்தகங்கள் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருதி, அவசரத் தேவைகளுக்காகத் தமிழ்நாட்டில் 5,000 மருந்துக் கடைகள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள் தொடர்ந்து இயங்கும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மருந்து விற்பனையாளர்கள் நாளை கடையடைப்பு அறிவித்த நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், 5,000 கடைகள் நாளை இயங்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மத்திய அரசுக்கு எதிராக மருந்தகங்கள் நாளை நடத்தும் நாடு தழுவிய கடையடைப்பை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்,

மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள், அப்போலோ, மெட்பிளஸ், துளசி பார்மசி, முத்து பார்மசி போன்ற சங்கிலித் தொடர் மருந்தகங்கள் மற்றும் முதல்வர் மருந்தகம், தமிழ்நாடு கூட்டுறவு சங்க மருந்தகங்கள், பிரதம மந்திரி ஜன் ஔஷதி கேந்திரா போன்ற அரசு ஆதரவு சில்லறை விற்பனை நிலையங்கள் கடையடைப்பில் பங்கேற்கவில்லை. எனவே, நாளை சுமார் 5,000 மருந்தகங்கள் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version