இந்தியாவில் முதன்முறையாக முற்றிலும் டிஜிட்டல் மயமாக நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணிகள் இன்று தமிழகம் முழுவதும் தொடங்குகின்றன. ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பணியின் போது, வீடுகளின் பட்டியலிடுதல் மற்றும் வீட்டு வசதிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளன.

மாநிலம் முழுவதும் 19,000 அதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பில், சுமார் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் களமிறங்குகின்றனர். தகவல்களைத் துல்லியமாகவும் வேகமாகவும் பதிவு செய்யும் வகையில், கணக்கெடுப்பாளர்கள் அனைவரும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் செயலியைப் பயன்படுத்த உள்ளனர்.

முதல் கட்டமான இந்தப் பணியில் வீடுகளின் கட்டட அமைப்பு, குடிநீர், கழிப்பறை, மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் இணைய வசதிகள் உள்ளிட்ட 33 அடிப்படை விபரங்கள் மட்டுமே கேட்கப்படும். குடும்ப உறுப்பினர்களின் முழுமையான விவரங்கள் அடுத்தடுத்த கட்டத்தில்தான் சேகரிக்கப்படும். இதற்கிடையே, கடந்த ஜூலை 17 முதல் 31 வரை இணையவழி சுய-கணக்கெடுப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் se.census.gov.in அதிகாரப்பூர்வ தளம் மூலம் தங்களின் விவரங்களை ஆன்லைனிலேயே முன்பதிவு செய்துள்ளனர். ஆன்லைனில் பதிவு செய்தவர்கள், நேரில் வரும் கணக்கெடுப்பாளரிடம் தங்களுக்கு வழங்கப்பட்ட குறிப்பு எண்ணைக் காண்பித்தால் போதுமானது. விடுபட்ட மற்ற அனைத்துக் குடும்பங்களுக்கும் கணக்கெடுப்பாளர்கள் நேரடியாக வீடு தேடிச் சென்று விவரங்களைப் பெற்றுக்கொள்வர்.

1948 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்ட விதிகளின்படி, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அனைத்துத் தகவல்களும் பாதுகாப்பாகவும், முற்றிலும் இரகசியமாகவும் பேணப்படும். இந்தத் தரவுகள் அனைத்தும் எதிர்கால அரசுத் திட்டங்கள், கொள்கை வகுத்தல் மற்றும் சமூக மேம்பாட்டு ஆய்வுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படவுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் கணக்கெடுப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version