தமிழகத்தில் பெண்களின் பங்கேற்பை வேலைவாய்ப்புச் சந்தையில் உயர்த்தவும், அவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான பணிச்சூழலை உறுதி செய்யவும் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக, ‘பெண்களுக்கான தரமான வேலைவாய்ப்புத் திட்டம்’ (Women’s Quality Employment Plan – WQEP) என்ற மாநில அளவிலான புதிய செயல்திட்டத்தை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது.

சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் இயங்கும் ‘தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம்’ (TNWESAFE) சார்பில், இந்தத் திட்டத்தை வடிவமைப்பதற்கான ஆலோசனை நிறுவனத்தைத் தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம், தமிழகம் முழுவதும் பெண்களின் தற்போதைய வேலைவாய்ப்பு நிலை மற்றும் அவர்கள் சந்திக்கும் பல்வேறு சவால்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆய்வின் மூலம், பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தடுக்கும் தடைகளான சமூக மற்றும் பொருளாதாரச் சூழல்கள், போக்குவரத்து வசதிகள், திறன் குறைபாடுகள் மற்றும் முக்கியமாகப் பல பெண்களுக்குச் சவாலாக இருக்கும் ‘குழந்தை பராமரிப்பு’ போன்ற சிக்கல்கள் கண்டறியப்படும். இவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஆக்கபூர்வமான வழிமுறைகளை ஆலோசனை நிறுவனம் பரிந்துரைக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பம்சங்களையும், அங்குள்ள தொழில் வாய்ப்புகளையும் கணக்கில் கொண்டு, எந்தெந்த துறைகளில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை அந்த நிறுவனம் அடையாளம் காண வேண்டும். இதன் அடிப்படையில், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்கான ஒரு விரிவான கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் ஆலோசனை நிறுவனம், தனது ஆய்வு அறிக்கையையும், மாநில மற்றும் மாவட்ட அளவில் செயல்படுத்தக்கூடிய WQEP செயல்திட்டத்தையும் அடுத்த ஆறு வாரங்களுக்குள் அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, தமிழகப் பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version