கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்திய திடீர் தாக்குதலுடன் தொடங்கிய போர், ஜூன் 15 அன்று (அதாவது இன்று) எட்டப்பட்ட அமைதி உடன்படிக்கையின் மூலம் 107 நாட்களுக்குப் பிறகு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. மூன்று மாதங்களுக்கும் மேலாக உலகையே உலுக்கிய இந்தப் போரில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புகளின் தொகுப்பு இதோ.

இந்தப் போரில் மிகக் கொடூரமான பாதிப்பைச் சந்தித்தது அப்பாவிப் பொதுமக்கள் தான். போரின் தொடக்கத்திலேயே ஹார்முஸ்கான் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க வான்வழித் தாக்குதலில் 175 பள்ளி மாணவிகள் உயிரிழந்தனர். ஈரானிய ஊடகங்கள் மற்றும் உளவுத்துறை அமைப்புகளின்படி, இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட ஈரானிய வீரர்கள் மற்றும் 1,508 ஈரானிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 22,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

போரின் கோரத்தாண்டவத்தால் ஈரானுக்குள் மட்டும் சுமார் 39 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். போரின் முதல் நாளன்றே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஈரானின் ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 4’ ஏவுகணைத் தாக்குதல்களால் 15 இஸ்ரேலிய பொதுமக்கள் உயிரிழந்தனர், 3,300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்கத் தரப்பில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், 200 பேர் காயமடைந்துள்ளனர்.

உலகப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ‘ஹார்முஸ் நீரிணை’ முற்றிலும் முடக்கப்பட்டதே இந்த அளவுக்குப் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் ஆகும். இந்தப் போரினால் உலகப் பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு 2.2 டிரில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரே மாதத்தில் மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரத்தில் 120 பில்லியன் டாலர் முதல் 194 பில்லியன் டாலர் வரை சேதம் ஏற்பட்டுள்ளது.  உலக எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் 20% செல்லும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால், பிப்ரவரியில் 70-72 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, போரின் போது பேரலுக்கு 119 டாலர் வரை கவரேஜ் எட்டி உச்சத்துக்கே சென்றது.  இந்தப் போருக்காக அமெரிக்கா மட்டும் இதுவரை 1.12 டிரில்லியன் டாலர் தொகையைச் செலவிட்டுள்ளது.

இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்: இந்தப் போரில் இந்தியாவும் நேரடியாகப் பாதிக்கப்பட்டது. ஜூன் 9-10 நள்ளிரவில், அமெரிக்காவின் கடற்படை முற்றுகை எச்சரிக்கையை மீறியதாகக் கூறி ‘MT செட்டபெல்லோ’ (MT Settebello) என்ற எண்ணெய் டாங்கர் கப்பல் மீது அமெரிக்க மத்திய கமாண்ட் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் பயணம் செய்த 24 இந்தியர்களில் 21 பேர் மீட்கப்பட்ட நிலையில், சிவானந்த் சௌராசியா (உத்தரப் பிரதேசம்), ஆதித்யா சர்மா (இமாச்சலப் பிரதேசம்) மற்றும் தலைமை பொறியாளர் பட்நாலா சுரேஷ் (விசாகப்பட்டினம்) ஆகிய 3 இந்திய மாலுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு இந்தியா தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88%-ஐ இறக்குமதி செய்கிறது. இதில் 50% வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்முஸ் நீரிணை வழியாக வருகிறது. எண்ணெய் விலை உயர்ந்ததால் இந்தியாவின் GDP வளர்ச்சி கணிப்பு 6.9%-லிருந்து 6.5% ஆகக் குறைந்தது.

அமெரிக்கா நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் விமானப்படைத் தளங்கள் மற்றும் ஐஆர்ஜிசி முகாம்கள் உட்பட 51 ராணுவ இலக்குகள் தகர்க்கப்பட்டன. பண்டார் அப்பாஸ் கடற்படைத் தளம் முழுமையாக நிலைகுலைந்தது.  

அமெரிக்க அதிபர் டிரம்ப், “ஈரான் கடற்படையை முற்றிலும் அழித்துவிட்டதாகவும் 158 கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறினார். அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ CENTCOM அறிவிப்பின்படி குறைந்தது 17 ஈரானிய போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

யார் அதிக இழப்பைச் சந்தித்தார்கள்? பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் பில்லியன் கணக்கில் பணத்தை இழந்திருந்தாலும், மனிதநேய அடிப்படையில் மிக மோசமான அழியாத பேரழிவையும், அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களையும், 3.9 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தையும் இழந்து “ஈரான் நாடே” இந்தப் போரில் மிக மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது.

ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இந்த அமைதி உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாக உள்ள நிலையில், ஆயுதங்கள் என்றும் தீர்வாகாது என்பதை இந்த 107 நாள் போர் உலகிற்கு உணர்த்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version