நீட் தேர்வு முறைகேடுகள், தொடர் வினாத்தாள் கசிவுகள் மற்றும் டெல்லியில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட காவல் துறைத் தாக்குதலைக் கண்டித்து, மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் மத்திய அரசைக் கடுமையாக விமரித்துப் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “ஒரு குழந்தை அழுதபோதே நாம் கேட்டிருக்க வேண்டும். மாறாக, நமது ஏராளமான குழந்தைகள் இறக்கும் வரை நாம் காத்திருந்துவிட்டோம். கற்றலுக்குப் பதிலாகப் பயிற்சிகளும், ஆர்வத்திற்குப் பதிலாகப் பதற்றமும், தகுதிக்குப் பதிலாகக் குற்றச் செயல்களும் மேலோங்கியுள்ள ஒரு கல்வி முறை முற்றிலும் சீர்கெட்டுப் போய்விட்டது.
பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்குப் பதிலளிப்பதற்கு மாறாக, தடுப்புகளையும் லத்திகளையும் பரிசளிக்கும் போது ஒரு நாடு தோற்றுவிட்டது என்றே அர்த்தம்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இப்போராட்டத்தில் 20 நாட்களுக்கும் மேலாகத் தீவிர உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள கமல்ஹாசன், “வரவிருக்கும் தொலைதூரப் பயணத்திற்கு இந்த நாட்டிற்கு உங்களின் மனச்சாட்சி தேவைப்படுகிறது. தயவுசெய்து உங்கள் உண்ணாநோன்பை முடித்துக் கொள்ளுங்கள்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், போராட்டக் களத்தில் இருக்கும் இந்திய மாணவர்களை நோக்கி, “இந்திய நாட்டின் குழந்தைகளே, நீங்கள்தான் நாட்டின் சிறந்த வழிகாட்டிகள். உங்களுக்கான கடமையை நீங்கள் செவ்வனே செய்துவிட்டீர்கள். இனி நாடு உங்களுக்கான கடமையைச் செய்ய வேண்டிய தருணம் இது. எங்களின் தோல்விகளை விட உங்கள் கனவுகள் எப்போதும் பெரிதாக இருக்கட்டும்” என்று உணர்வுபூர்வமாகத் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
