2026 காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதாக இருந்த ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம், செலவு அதிகரித்ததை காரணம் காட்டி கடந்த 2023-ஆம் ஆண்டு விலகிக் கொண்டது. இதனையடுத்து, போட்டிகளை நடத்த முன்வந்த ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகருக்கு வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே அவகாசம் இருந்ததால், முழு அளவிலான போட்டிகளை நடத்துவது சாத்தியமில்லாமல் போனது.
புதிதாக விளையாட்டு கிராமம் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதைத் தவிர்க்க கிளாஸ்கோ நிர்வாகம் முடிவு செய்தது. ஏற்கனவே உள்ள நான்கு அரங்குகள் மற்றும் விடுதிகளை மட்டுமே பயன்படுத்திப் போட்டிகளைச் சுருக்கமான முறையில் நடத்தத் திட்டமிட்டதால், விளையாட்டுகளின் எண்ணிக்கை 19-ல் இருந்து 10 ஆகக் குறைக்கப்பட்டது.
இந்த அதிரடி மாற்றத்தால் பேட்மிண்டன், கிரிக்கெட், ஹாக்கி, ஸ்குவாஷ், மேஜை டென்னிஸ், மல்யுத்தம் உள்ளிட்ட பல முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த பர்மிங்காம் போட்டிகளில் இந்தியா வென்ற மொத்தப் பதக்கங்களில் பாதியளவு இந்த விளையாட்டுகளின் மூலமாகவே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விளையாட்டுகள் நீக்கப்பட்டதன் காரணமாக, பி.வி. சிந்து, மனு பாக்கர், ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் அமன் செராவத் உள்ளிட்ட இந்தியாவின் பல முன்னணி நட்சத்திர வீரர்களால் இம்முறை காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
