கடந்த 2022-ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செரீனா வில்லியம்ஸ், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் இறங்கினார்.  லண்டனில் நடைபெறும் ‘குவீன்ஸ் கிளப் சாம்பியன்ஷிப்’ (Queen’s Club Championships) தொடரின் மூலம் அவர் தனது அதிரடி கம்பேக்கை பதிவு செய்துள்ளார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் களமிறங்கிய செரீனா வில்லியம்ஸ், 19 வயதான கனடா நாட்டின் இளம் வீராங்கனை விக்டோரியா எம்போகோ  உடன் ஜோடி சேர்ந்தார். இந்தத் தொடரின் முதல் சுற்றில், தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த நிக்கோல் மெலிச்சர்-மார்டினெஸ் மற்றும் எரின் ரவுட்லிஃப் ஆகியோரை 7-6(2), 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி செரீனா-விக்டோரியா ஜோடி குவார்ட்டர் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. 44 வயதிலும் செரீனா வில்லியம்ஸ் மணிக்கு 193 கி.மீ வேகத்தில் சர்வீஸ் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

லண்டன் புல்வெளி மைதானத்தில் செரீனா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் இந்த ஆண்டு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து செரீனா வில்லியம்ஸ் கூறுகையில், “நான் ஏற்கனவே கூறியது போல, தற்போதைக்கு ஒவ்வொரு நாளையும் ஒரு சவாலாக மட்டுமே எதிர்கொண்டு வருகிறேன். விம்பிள்டன் குறித்து முடிவெடுக்க எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் உள்ளது. அதைப்பற்றி யோசிப்பதற்கான நேரத்தையும் சுதந்திரத்தையும் விம்பிள்டன் நிர்வாகம் எனக்கு வழங்கியுள்ளது என்றார்.

வெற்றி பெற்ற போதிலும் தனது ஆட்டம் குறித்துப் பேசிய செரீனா, “மை காட்! எனது ஆட்டத்திற்கு என்ன மதிப்பெண் கொடுக்கலாம்? ஒரு ‘சி-மைனஸ்’ கொடுக்கலாம். போட்டி தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, புல்வெளி  மைதானத்தில் விளையாடுவது எளிதான காரியம் அல்ல. இருப்பினும் ஒட்டுமொத்தமாக ஆட்டம் திருப்திகரமாக இருந்தது. அடுத்த போட்டியில் எனது ரிட்டர்ன்களை இன்னும் சிறப்பாக மாற்றுவேன்” என்றார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் காண செரீனாவின் மகள்களான ஒலிம்பியா (Olympia) மற்றும் அதிரா (Adira) ஆகிய இருவரும் லண்டன் மைதானத்திற்கு வந்திருந்தனர். போட்டிக்குப் பிறகு அவர்களின் ரியாக்ஷன் என்ன என்று கேட்டதற்கு, “அதிராவுக்கு பொம்மைக்கடைக்குச் செல்ல வேண்டும், ஒலிம்பியாவுக்கு இரவு உணவிற்கு என்ன ஸ்பெஷல் என்று தெரிய வேண்டும்… அவ்வளவுதான்!” என்று சிரித்துக்கொண்டே செரீனா பகிர்ந்து கொண்டார்.

அடுத்ததாக வியாழக்கிழமை நடைபெறவுள்ள குவார்ட்டர் ஃபைனல் போட்டியில் செரீனா-விக்டோரியா ஜோடி, லெய்லா பெர்னாண்டஸ் மற்றும் லாரா சீக்மண்ட் ஜோடியை எதிர்கொள்ளவுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version