ஆதார் செயலி 4 கோடி பதிவிறக்கங்களை கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டிஜிட்டல் அடையாள சேவைகள் மீது பொதுமக்கள் அதிக நம்பிக்கை கொண்டிருப்பதையே இந்த மைல்கல் பிரதிபலிப்பதாக அரசு கூறியுள்ளது.
மத்திய அரசின் செய்திக்குறிப்பின்படி, ஆதார் செயலி தற்போது ஆதார் தொடர்பான பல்வேறு சேவைகளை ஒரே டிஜிட்டல் தளத்தில் வழங்கும் வசதியான செயலியாக உருவெடுத்துள்ளது. முகவரி மாற்றம், கைபேசி எண் புதுப்பித்தல், மின்னஞ்சல் முகவரி சேர்த்தல், பயோமெட்ரிக் விவரங்களை நிர்வகித்தல், இ-ஆதார் பதிவிறக்கம் உள்ளிட்ட சேவைகளை மக்கள் வீட்டிலிருந்தபடியே எளிதாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த செயலி அறிமுகமானதிலிருந்து இதுவரை 11.65 லட்சம் முகவரி மாற்றங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், சுமார் 49 லட்சம் கைபேசி எண் புதுப்பிப்புகளும் செயலி மூலம் செய்யப்பட்டுள்ளதால், ஆதாருடன் இணைக்கப்பட்ட தொடர்பு விவரங்களை மக்கள் எளிதாக புதுப்பித்து வருகின்றனர்.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரி புதுப்பிப்பு வசதியும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை சுமார் 12.5 லட்சம் மின்னஞ்சல் முகவரிகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ரூ.75 கட்டணம் வசூலிக்கப்பட்ட இந்த சேவை, 2026 டிசம்பர் 31 வரை ஆதார் செயலி மூலம் இலவசமாக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் வழங்கப்படும் பயோமெட்ரிக் லாக்/அன்லாக் வசதியும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த வசதி 1.91 கோடி முறைக்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் எண் வைத்திருப்பவர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
