சென்னையில் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணாசாலை பல்லவன் இல்லம் எதிரே அமைந்துள்ள அவரது சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காமராஜர் ஏழை மக்களின் தேவைகளையும் எதிர்கால நலனையும் மையமாகக் கொண்டு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியதால், இன்றளவும் பொதுமக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த தலைவராக விளங்குகிறார் என்று புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக நிலை குறித்து கடுமையாக விமர்சித்த ஜெயகுமார், காவல் நிலைய மரணங்கள், பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது என்றார். நாகர்கோவிலில் காவல்துறை தாக்குதலால் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஈரோடு பவானி மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் வழக்குகளில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும், இதுபோன்ற விவகாரங்களில் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மாநில அரசின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விமர்சனம் முன்வைத்தார். முதலமைச்சர் விஜய் இதுவரை முக்கிய பிரச்சினைகள் குறித்து ஊடகங்களை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கவில்லை என்றும், அரசு இயங்குகிறதா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளதாகவும் கூறினார். பல்வேறு பகுதிகளில் சாலை, தெருவிளக்கு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பணிகள் இன்னும் முழுமையாக தொடங்கப்படவில்லை என்றும், மழைக்காலம் நெருங்கிவரும் நிலையில் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.
தூக்கத்திலிருந்து எப்போது இந்த விஜய் அரசு, தவெக அரசு விழித்துக் கொள்ளும் என்பதுதான் மக்களுடைய கேள்வியாக உள்ளது. உதாரணத்திற்கு மக்கள் சுருக்கமாக வெயிலின் கொடுமை தாங்காமல் தவளை படம் எடுத்து ஆடும் பாம்பு நிழலில் இருக்கும் பாவம் அப்படி ஒரு நிலைமை தான் தமிழ்நாடு மக்களின் நிலைமையாக இருக்கிறது. அரசு தாமதமின்றி விழிப்புணர்வுடன் செயல்பட்டு மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருப்பதாக ஜெயகுமார் குறிப்பிட்டார்.

