ரூ.14.79 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்ட சென்னை பூங்கா அமிர்த் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 17-ஆம் தேதி காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார்.

நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட 75 அமிர்த் ரயில் நிலையங்களை ஒரே நேரத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தத் திறப்பு விழா நடைபெறுகிறது.

சென்னை கடற்கரை–செங்கல்பட்டு புறநகர் ரயில் பாதையில் அமைந்துள்ள இந்த நிலையம், சென்னை சென்ட்ரல், எம்.ஆர்.டி.எஸ். (MRTS) மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை ஒருங்கிணைக்கும் முக்கிய பல்முனை போக்குவரத்து மையமாக விளங்குகிறது. தினமும் சுமார் 198 புறநகர் ரயில்களும், 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளும் இந்த நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.

மறுசீரமைப்பின் மூலம் புதிய நுழைவுவாயில், அடையாளக் கோபுரம், நவீன தகவல் பலகைகள், சீரமைக்கப்பட்ட நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம், கூடுதல் மேற்கூரைகள், இரண்டு மின்தூக்கிகள், MRTS மற்றும் மெட்ரோவை நேரடியாக இணைக்கும் நடைபாதைகள் உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த வசதிகள் மூலம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உள்ளிட்டோரின் பயணம் மேலும் எளிதாகும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version