மிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ்  ஆகிய மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடைமுறையில் உள்ள 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை  மேலும் உயர்த்துவதற்குத் தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த 7.5% உள் இட ஒதுக்கீட்டுத் திட்டத்தின் மூலம், நீட் (NEET) தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, நூற்றுக்கணக்கான ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகளின் அரசு மருத்துவராகும் கனவு நனவாகியுள்ளது.

இந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் கமிட்டி ஏற்கனவே அரசுக்கு வழங்கியிருந்த பரிந்துரையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் வரை இட ஒதுக்கீட்டை பின்பற்றலாம் என தெரிவித்திருந்தது. மேலும்  5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இட ஒதுக்கீட்டின் சாதக பாதகங்களை ஆய்வு செய்து, இட ஒதுக்கீட்டை மாற்றி அமைப்பது அல்லது அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கலாம் எனவும் பரிந்துரைத்திருந்தது.

தற்போதுள்ள விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 550-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) ஆகிய மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடைமுறையில் உள்ள 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை  10 சதவீதமாக உயர்த்துவதற்குத் தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவ்வாறு இந்த இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தும் பட்சத்தில், ஆண்டுதோறும் பயனடையும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 800-ஆக அதிகரிக்கும். இதன் மூலம் மேலும் 250-க்கும் மேற்பட்ட தகுதியான மாணவர்களுக்குக் கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்கப் பெறும்.

நடப்பு 2026-27 கல்வியாண்டிற்கான மருத்துவக் கலந்தாய்வு (Medical Counselling) செயல்முறைகள் விரைவில் தொடங்கவுள்ள சூழலில், தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) புதிய இட ஒதுக்கீட்டுப் பட்டியலின் (Seat Matrix) அடிப்படையில் இந்த 10% உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை அல்லது அறிவிப்பைத் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version