முதல்வர் விஜய் சிலரை பலகாலம் ஏமாற்றலாம். பலரை சில காலம் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (த.வெ.க.) அரசு பல்வேறு துறைகளில் தோல்வியடைந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இரண்டரை ஆண்டுகளில் கட்சியைத் தொடங்கி 35 சதவீத வாக்குகளைப் பெற்ற விஜய்யின் வெற்றியைப் பாராட்டும் அதேவேளையில், 65 சதவீத மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இன்று வெளியிட்ட அறிக்கையில் உதயகுமார் கூறியுள்ளதாவது, “விஜய்யிடம் சேர வாசலில் ஆள் காத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் விஜய்யை நேரில் பார்ப்பதே அரிது. இது ஜனநாயகத்துக்கு அழகா?” என்று கேள்வி எழுப்பினார். சினிமா கவர்ச்சி மற்றும் வசீகரத்தால் கிடைத்த வெற்றி நிரந்தரமல்ல என்றும், 35 சதவீத வாக்காளர்களிடம் இந்த வசீகரம் எப்போதும் தாக்குப்பிடிக்காது என்றும் எச்சரித்தார். மேலும், விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி, தடையில்லா மின்சாரம் வழங்கல், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் விஜய் அரசு முழுமையாகத் தோல்வியுற்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

“தமிழகம் முழுவதும் இந்த அரசுக்கு எதிராகப் போராட்டக் களமாக மாறியுள்ளது. சிலரை நீண்ட காலம் ஏமாற்றலாம், பலரை சிறிது காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது,” என்று அவர் தெரிவித்தார். குறிப்பாக, சனிக்கிழமை தோறும் அ.தி.மு.க. தொண்டர்களை இலக்கு வைத்து ‘ஆள் பிடிக்கும்’ நடவடிக்கை நடைபெறுவதாகக் குற்றம் சாட்டிய உதயகுமார், “தூண்டிலில் புழு வைத்து மீன் பிடிப்பது போல இவர்கள் செயல்படுகின்றனர். அது மீனை வாழ வைக்க அல்ல, சாப்பிடவே” என்ற உவமையுடன் எச்சரித்தார்.

அ.தி.மு.க. விசுவாசத் தொண்டர்கள் இதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், உதயகுமாரின் இந்தக் கருத்துகள் அ.தி.மு.க.வினரிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version