தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இது. பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூக நலன் ஆகியவற்றை மையப்படுத்திய பல பெரிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தொழில்நுட்ப வளர்ச்சி, விளையாட்டு மேம்பாடு, உயர்கல்வி சீரமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

2036க்குள் தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். திருமணம் பெண்களின் வாழ்வில் முக்கியமான மகிழ்ச்சியான தருணம் எனக் குறிப்பிட்ட அமைச்சர், அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பெண்களுக்கு திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கு ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் ஆரம்பகால பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதிசெய்ய மாநிலம் முழுவதும் 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும். கல்வித் துறைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒதுக்கீடு. பள்ளிக் கல்விக்கு ரூ.44,527 கோடி, உயர்கல்விக்கு ரூ.8,393 கோடி. வெற்றி மடிக்கணினி திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடி மதிப்பில் மடிக்கணினிகள் வழங்கப்படும். உலகத் தரத்திலான செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை வடிவமைக்க நிபுணர் குழு அமைக்கப்படும். பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு AI திறன் பயிற்சி அளிக்கப்படும்.

ரூ.90 கோடியில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITI) நிறுவப்படும். சட்டக் கல்வியை மேம்படுத்த புதிய சிறப்பு அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும். 10,000 பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும். “சூப்பர் சேஃப், சூப்பர் ஸ்கூல் சூழல் உறுதி” என அமைச்சர் தெரிவித்தார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்க்கும். 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும், நீட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தும் எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.

விளையாட்டுத் துறைக்கு ரூ.1,051 கோடி. மாநிலம் முழுவதும் ரூ.50 கோடியில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். கிராமிய விளையாட்டுப் போட்டிகளுக்கு ரூ.42 கோடி. பள்ளி நேரத்திற்குப் பிறகு தினமும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்ட விளையாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். வீரர்களுக்கு கூடுதலாக ரூ.22 கோடி உதவித்தொகை. சமூக நீதித் துறைக்கு ரூ.3,937 கோடி. அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.300 கோடி.

போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் புகார் அளிக்க பிரத்யேக மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படும். இந்தப் பட்ஜெட் பெண்கள் நலன், இளைஞர் திறன் மேம்பாடு, கல்வி மற்றும் சமூக நீதியை முன்னிறுத்தி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version