தமிழக அரசின் 2026-27 நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சனால் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் இது பெரும் கவனத்தை ஈர்த்தது. முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் எளிமையான உடையில் சட்டப்பேரவைக்கு வந்தார். அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் அறிக்கை கொண்டு வந்து, மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அரசியலுக்கு வந்ததாக முதலமைச்சரைப் பற்றி குறிப்பிட்டார். பிறப்பால் அனைவரும் சமம் என்றாலும் செயலால் வேறுபடுவதே சிறப்பு எனவும் அவர் கூறினார்.
கல்வித்துறையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து சைக்கிள்கள் வழங்கப்படும். இனி ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதியுடன் கூடிய நவீன ஸ்மார்ட் சைக்கிள்கள் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார். ஐந்து லட்சம் மாணவர்களுக்கு இந்த திட்டத்திற்கு ரூ.277 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி திட்டத்தின் கீழ் ரூ.2,000 கோடி மதிப்பில் லேப்டாப்கள் வழங்கப்படும். மாணவர் தங்குமிட வசதி மேம்பாட்டிற்கு ரூ.10 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த 3,734 பள்ளிகளுக்கு ரூ.2,132 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் அமல்படுத்தப்படும்.
24 மணி நேரமும் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் இந்த திட்டத்திற்கு ரூ.139 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பு சேர்க்கையை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் முதலமைச்சர் விஜய் 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகளை மூடியது, தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
மாநில வருவாயை அதிகரிக்க மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்த முதல் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

