தொடர் தேர்தல் தோல்விகள் மற்றும் உட்கட்சி விவகாரங்களால் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளதாக கருதப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமியும், எஸ்.பி. வேலுமணி தரப்பும் மாறி மாறி பரஸ்பரம் இன்று வெளியிட்டுள்ள கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பு பிரிவு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 25 பேர் ஆதரவளித்ததைத் தொடர்ந்து, அவர்களின் கட்சிப் பதவியைப் பறித்து உத்தரவிட்டுள்ளார் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி. அத்துடன் இரு தரப்பும் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக மாறி மாறி பரஸ்பரம் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளது.
பதவிக்காக துரோகம்
இந்த நிலையில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, கடந்த மே 13-ஆம் தேதி நடந்த அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், கழகக் கொறடாவின் உத்தரவை மீறி ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல் கழகத்திற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பதவி ஆசைக்காகவும், வாரியத் தலைவர் பதவிகளுக்காகவும் சுயநலத்துடன் செயல்படும் இவர்களது இழிசெயலைத் தொண்டர்கள் முறியடிப்பார்கள் என்றும், இதுபோன்ற விலகல்களால் கழகத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
எடப்பாடியின் இந்த அறிக்கையைத் தொடர்ந்து, இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிரடியான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
எடப்பாடியே பொதுச் செயலாளர்
எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுக்கு எல்லா பதவிகளும் புரட்சித்தலைவி அம்மா கொடுத்து விட்டார்கள். அதற்குப் பிறகு தொடர்ந்து தோல்விதான் 2019, 21, 26 என நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளோம்.
இப்போதும் அவர்தான் பொதுச் செயலாளர் எல்லாத்தையும் கூட்டு அரவணைத்து பேச வேண்டும். கண்டிப்பாக கட்சியை கட்டமைக்க வேண்டும் பொதுக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும். மாவட்ட செயலாளர்களிடம் பேசி அவரிடம் ஒப்படைக்க உள்ளோம். திமுக எதிர்ப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதேபோன்று உடனடியாக நீக்கத்தை விட்டு விட்டு உட்கார்ந்து பேச வேண்டும். தோல்வியை பற்றி ஆராய்ந்து கட்சியை நன்றாக வேகப்படுத்த வேண்டும். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்படியே இருந்தால் யார் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முன் வருவார்கள். அது எல்லாம் சரி செய்ய வேண்டும். மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையட்டும். சும்மா எதையாவது பேசி பேட்டி கொடுக்கக் கூடாது. வாட்ஸ்-அப் மற்றும் எக்ஸ் வலைதளங்களில் இப்பொழுது வேகமாக இருக்கக்கூடிய நிலையில், இதை ஏற்கனவே செய்திருந்தால் தேர்தலில் கூடுதலாக இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம். எங்களைப் பொறுத்தவரை அளவு மக்கள் ஆதரவு தமிழக வெற்றி கழகத்திற்கு கொடுத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் பொதுச்செயலாளர் அனைவரையும் கூட்டி கட்சியைக் கட்டமைக்க வேண்டும். இதனால் தோல்வி எங்கு தவறு செய்தோம் என்பதை ஆராய வேண்டும் என்றார்.

