மிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முனைப்பில் இருந்த திமுகவிற்கு, நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஒரு பெரும் பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளன. இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை, திமுகவின் எதிர்காலக் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழப்போவதை உறுதி செய்துள்ளது.

பொதுவாகத் தேர்தல் தோல்வி ஏற்பட்டால், இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மீதோ அல்லது கூட்டணி கட்சிகள் மீதோ பழியைப் போடுவதுதான் அரசியல் வழக்கம். ஆனால், மு.க.ஸ்டாலின் அப்படியெல்லாம் அல்லாமல், ஒரு படி மேலே சென்று, “இந்தத் தோல்விக்குத் திமுக தலைவர் என்ற முறையில் நானே பொறுப்பேற்கிறேன்” என்று அறிவித்துள்ளார். இது தொண்டர்கள் மத்தியில் அவர் மீதான நன்மதிப்பை உயர்த்தினாலும், இதற்கு பின்னால் ஒரு கடுமையான எச்சரிக்கை ஒளிந்திருப்பதை நிர்வாகிகள் உணர்ந்துள்ளனர்.

வெற்றி கிடைக்கும்போது மகுடம் சூட்டிக்கொள்ளும் தலைமை, தோல்வி வரும்போது பின்வாங்குவது முறையல்ல என்ற அவரது பேச்சு, “நான் பொறுப்பேற்றுக்கொண்டேன், இப்போது நீங்கள் உங்கள் தவறை ஒப்புக்கொள்ளுங்கள்” என்ற மறைமுகத் தூண்டுகோலாகும்.

சறுக்கியது எங்கே?

திமுகவின் கோட்டை என்று கருதப்படும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள், அதேபோல் புதுச்சேரி மாநிலத்தின் முடிவுகள் தலைமைக்கு கடும் அதிர்ச்சியைத் தந்துள்ளன.

ஆளுங்கட்சியாக இருப்பதால், “நாம் என்ன செய்தாலும் மக்கள் வாக்களிப்பார்கள்” என்ற அதீத தன்னம்பிக்கை (Overconfidence) பல மாவட்டச் செயலாளர்களிடம் இருந்தது.
சென்னையின் சில பகுதிகளில் நிலவும் உட்கட்சிப் பூசல், தேர்தல் களப்பணியைத் தடம் புரளச் செய்தது. ஒரு அணியினர் வேலை செய்தால், மற்றொரு அணியினர் முட்டுக்கட்டை போடும் கலாச்சாரம் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது.”மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே முக்கியம்” என்ற மனநிலை உருவானது.இதனால், சாதாரணத் தொண்டனுக்கும் தலைமைக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்தது. இதுவும் தோல்விக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

20 நாட்கள்… ஒரு கமிட்டி… அதிரடி கள ஆய்வு!

ஸ்டாலின் வெறும் பேச்சோடு நிறுத்திக்கொள்ளவில்லை. தோல்விக்கான காரணங்களை ஆராயத் தலைமைக் கழகத்தின் சார்பில் ஒரு விசேஷக் குழுவை அமைத்துள்ளார். இந்தக் குழு அடுத்த 20 நாட்களுக்குத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் தொகுதி வாரியாகச் சென்று, கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் ரகசியமாகத் தகவல்களைச் சேகரிக்க உள்ளது.

நிர்வாகிகள் சொல்லும் காரணங்களை விட, தொண்டர்கள் சொல்லும் உண்மைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்காகவே பிரத்யேக இணையதளம் (Website) ஒன்றையும் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாவட்டச் செயலாளர்களின் தலையீடு இன்றி, நேரடியாகத் தலைமையிடம் புகார்களைத் தெரிவிக்கத் தொண்டர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கட் அண்ட் ரைட் எச்சரிக்கை

இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் விடுத்த மிக முக்கியமான எச்சரிக்கை: “என்னால் செயல்பட முடியாது என்று நினைப்பவர்கள், மனப்பூர்வமாக முன்வந்து விலகிக்கொள்ளலாம்; அவர்களுக்குப் பதில் உழைக்கத் தகுதியானவர்கள் காத்திருக்கிறார்கள்.” – இது பல மூத்த நிர்வாகிகளின் பதவிகளுக்கு ஊதப்பட்ட அபாயச் சங்காகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நீண்ட காலமாக மாவட்டத்தைச் சுற்றிக் கோட்டை கட்டி வைத்திருக்கும் ‘மாவட்டக் குறுநில மன்னர்களுக்கு’ இந்த முறை கல்தா கொடுக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

களையெடுக்கப்படுமா கோஷ்டி அரசியல்?

“கட்சி வீக்காக இருக்கும் இடங்களில் எல்லாம் நிர்வாகிகளுக்குள் மோதல் இருக்கிறது” என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஸ்டாலின், இனி “ஒற்றுமை” ஒன்றே தாரக மந்திரம் என்று கூறியுள்ளார். சூரியன் ஒருபோதும் மறையாது, அது மீண்டும் உதித்தே தீரும் என்று நம்பிக்கையூட்டிய அவர், அந்த உதிப்பிற்குத் தடையாக இருக்கும் ‘மேகங்களை’ (நிர்வாகிகளை) கலைக்கத் தயாராகிவிட்டார்.

திமுகவில் வரப்போகும் இந்த ‘அமைப்பியல் மாற்றம்’ என்பது வெறும் பெயரளவில் இருக்காது என்பது ஸ்டாலினின் பேச்சில் இருந்து தெரிகிறது. எதிர்கால தேர்தலை இலக்காகக் கொண்டு, கட்சியை முழுமையாகச் சுத்திகரிக்கும் பணியில் அவர் இறங்கியுள்ளார். தவறு செய்தவர்கள் மீதான நடவடிக்கை, தகுதியான இளைஞர்களுக்குப் பதவி, அடிமட்டத் தொண்டர்களுக்கு அங்கீகாரம் – இவைதான் திமுகவின் அடுத்தகட்டப் பயணமாக இருக்கப்போகிறது. 20 நாட்கள் கழித்துத் தாக்கல் செய்யப்படப்போகும் அந்த ரகசிய அறிக்கைதான் திமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது!

– பா. முகிலன்

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version