தமிழ்நாட்டில் இருபெரும் கட்சிகளில் ஒன்றான அதிமுக தற்போது இருந்த இடம் தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது எனலாம். பாஜகவுடன் எப்போது அதிமுக கூட்டணி சேர்ந்ததோ அப்போதிலிருந்தே அதிமுகவின் சரிவு தமிழ்நாட்டில் தொடங்கி விட்டது எனலாம். தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.
கடந்த தேர்தலில் இருபெரும் திராவிட கட்சிகளை ஓரங்க்கட்டி ஆட்சியை பிடித்திருக்கிறது விஜய்யின் தவெக. இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுகவினர் பலர், எடப்பாடி பழனிசாமி மேல் இருந்த அதிருப்தி காரணமாக அதிமுகவில் இருந்து விலகி தற்போது தவெகவில் இணைந்து வருகின்றனர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்.பி.வேலுமணி அணி என இரண்டாக பிரிந்து கிடக்கிறது.
கடந்த தேர்தலின் போதே, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியின் ஒன்றிணைக்க வேண்டும் என முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். பிறகு தேர்தலில் தோல்வி அடைந்ததால், எடப்பாடி மீது பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை சந்தித்து தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில், தென்காசி மாவட்ட நிர்வகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர்,
”நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக உழைத்து அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என கட்சியினருக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
சமூகவலைதள பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும், கட்சியில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும்” என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
சசிகலா தினகரன் உள்ளிட்டோர் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் தான் வாக்குகள் சிதறாமல் கிடைக்கும் என நிர்வாகிகள் சிலர் கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
