திமுகவை பலவீனப்படுத்தும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும், தற்போதைய சவால்களைத் தாண்டி கட்சி மீண்டும் வலுவாக எழுச்சி பெறும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் தங்களது அரசியல் பயணத்தில் பல்வேறு சோதனைகள் மற்றும் துரோகங்களை எதிர்கொண்டு கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

தாம் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்ற பிறகும் பல்வேறு இன்னல்கள், சவால்கள் மற்றும் துரோகங்களை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒத்துழைப்புடன் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையிலும், கட்சியில் பல்வேறு பதவிகளை அனுபவித்த சிலர் தற்போது கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையால் மனமுடைந்து தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும், அதிமுகவின் தீவிர தொண்டருமான கே.எஸ். மகேந்திரன் உயிரிழந்த செய்தி தமக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தற்போதைய நிலை குறித்து தொண்டர்கள் யாரும் மனம்தளர வேண்டாம் என்றும், எந்தவித விபரீத முடிவுகளையும் எடுக்கக் கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

வெற்றியும் தோல்வியும் அரசியலில் இயல்பானவை என்றும், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக பல முறை தோல்விகளை கடந்து மீண்டும் வெற்றி கண்டுள்ளது என்றும் அவர் நினைவுபடுத்தியுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவிலிருந்து கட்சியை மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதிர்கால தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version