டிஜிட்டல் இந்தியா மற்றும் வீடு தேடி வரும் சேவைகள் எனப் பல்வேறு திட்டங்கள் பேசப்பட்டு வரும் வேளையில், வெறும் 500 ரூபாய் மாதாந்திர பென்ஷனுக்காக 90 வயது மாமியாரைத் தனது முதுகில் சுமந்து கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் மைல் கணக்கில் நடந்து சென்ற மருமகளின் நெஞ்சை உருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://x.com/archana2098/status/2058101288261546331?
சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் உள்ள ஜங்கல்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்மனியா. இவருடைய மாமியார் சோன்வாரி (90). முதியோருக்கான மாதாந்திர பென்ஷன் தொகை ரூ.500, இந்தநிலையில், வங்கியின் ‘கே.ஒய்.சி’ விவரங்கள் புதுப்பிக்கப்படாத காரணத்தால் கடந்த 4 மாதங்களாக இவருக்குக் கிடைக்கவில்லை.
வழக்கமாக ‘வங்கி மித்ரா’ பணியாளர் மூலம் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் இந்தத் தொகை, ஆவணக் குளறுபடிகளால் நிறுத்தப்பட்டதால், வேறு வழியின்றி சுக்மனியா தனது மாமியாரைத் தூக்கிக் கொண்டு மென்பட் (Mainpat) நகரில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா கிளைக்குக் கரடுமுரடான காட்டுப் பாதைகள் மற்றும் ஓடைகளைக் கடந்து பல கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார். இதை அந்த வழியே சென்ற ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர, அது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துத் தகவல் அறிந்த அந்த வட்டார பஞ்சாயத்து முதன்மை அதிகாரி குஷ்பு சாஸ்திரி கூறுகையில், “ஆவணங்கள் சரிபார்க்கப்படாததால் கடந்த 4 மாதங்களாகப் பென்ஷன் நிறுத்தப்பட்டது உண்மைதான். அவர்கள் வங்கிக்கு வந்தவுடன் உடனடியாக நிலுவையில் இருந்த ரூ.2,000 வழங்கப்பட்டது. அடுத்த மாதம் முதல் அவர்களின் வீட்டிற்கே பென்ஷன் சென்றடையத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என உறுதியளித்தார்.
இச்சம்பவம் குறித்துப் பேசிய முன்னாள் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ, “தேர்தல் நேரத்தில் ஓட்டுக் கேட்டு மக்களின் வீடுகளுக்குச் செல்லும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், முதியோர்களுக்கான பென்ஷன் தடையின்றி அவர்களின் இல்லங்களைச் சென்றடைவதையும் உறுதி செய்ய வேண்டும்,” என அரசைச் சாடியுள்ளார்.
