மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் (MGNREGA) பதிலாக, ‘விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்திரவாத இயக்கம் (கிராமின்)’ என்ற புதிய 125 நாள் வேலைத் திட்டத்தை ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இப்புதிய திட்டத்தின் வரைவு அறிக்கையில், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு வரலாறு காணாத வகையில் குறைக்கப்பட்டுள்ளம் நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
12 நாட்கள் கூட வேலை வழங்க முடியாது
இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”125 நாள் வேலைத் திட்டத்திற்காக இந்தியா முழுவதும் ரூ.95,692 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு வெறும் ரூ.3,923 கோடி (4.09%) மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்தத் திட்டத்திற்குத் தமிழகத்திற்கு 10 விழுக்காட்டிற்கும் மேல் நிதி கிடைத்த நிலையில், தற்போது அது பாதியாகக் குறைக்கப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்.
2023-24-ல் ரூ.12,136 கோடியாக இருந்த இந்த நிதி, தற்போது வெறும் ரூ.3,923 கோடியாகச் சுருங்கியுள்ளதால், கிராமப்புற ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 12 நாட்கள் கூட வேலை வழங்க முடியாது” என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
முன்பு மாநிலங்களின் மனித ஆற்றல் தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 16-ஆவது நிதி ஆணையத்தின் வரிப்பகிர்வுப் பரிந்துரைகளின்படி மறைமுக வரி வருவாயை அடிப்படையாகக் கொண்டு நிதி ஒதுக்குவதே இச்சரிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 9.4% பங்களிப்பைத் தரும் தமிழகத்திற்கு, நிதிப்பகிர்வில் 4.07% மட்டுமே வழங்குவது ஏமாற்று வேலைம் என்று அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசுக்கு வேண்டுகோள்
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, வளர்ச்சியை எட்டியதற்காகத் தமிழகத்தைத் தண்டிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள அன்புமணி, ”மாநில உரிமைகளுக்கு எதிரான இந்த வரைவுத் திட்ட அறிக்கையைத் தமிழக அரசு எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. பழைய முறைப்படியே தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கக் கோரியும், மொத்த நிதியில் குறைந்தபட்சம் 10% தமிழகத்திற்குப் பெற்றுத்தரவும் மாநில அரசு மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

