திருச்சி, கீழப்புலிவார் ரோடு பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, மதுபானம் கலந்த குளிர்பானம் கொடுக்கப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.
போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் திருச்சி கோட்டைப் பகுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது ஆளுங்கட்சியான தவெக (தமிழக வெற்றி கழகம்) அரசுக்கு எதிரான மிகப்பெரிய அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது.
இச்சம்பவத்தைக் கண்டித்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் (X) தளத்தில் தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
பீதியில் பெண்கள்
இதுதொடர்பாக கனிமொழி விடுத்துள்ள அறிக்கையில், “திருச்சியில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
தொடர்ச்சியாக அரங்கேறும் இதுபோன்ற கொடூர குற்றச் சம்பவங்களால் தமிழ்நாட்டுப் பெண்கள் தங்களின் பாதுகாப்புக் குறித்து பெரும் பீதியில் உறைந்து போய் இருக்கிறார்கள்” என்றும் அவர் சாடியுள்ளார்.
எங்கே சட்டம் ஒழுங்கு?
“எதற்குமே பொறுப்பேற்காத இந்த தவெக அரசு, என்ன தவறு நடந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்ற துணிச்சலில்தான் குற்றவாளிகள் சட்டம்-ஒழுங்கைத் தூக்கி எறிந்துவிட்டு ஊருக்குள் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்களா என்ற பலத்த கேள்வி எழுகிறது” எனத் தனது பதிவில் வேதனை தெரிவித்துள்ளார்.
பதில் கூறுவாரா முதலமைச்சர்?
”காவல்துறை மற்றும் உள்துறையைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் விஜய், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்ந்து சீர்கெட்டு வருவது குறித்து இதுவரை எந்தவொரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தவில்லை. மக்கள் முன் வந்து விளக்கமளிக்கப் போவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது.
முதலமைச்சர்தான் மௌனம் காக்கிறார் என்றால், குறைந்தபட்சம் இந்தத் துறை சார்ந்த உயர்மட்ட அதிகாரிகளாவது உடனடியாக மக்கள் முன் தோன்றி என்ன நடக்கிறது என்பது குறித்த உண்மைகளை விளக்க வேண்டும்” என்றும் அவர் தனது பதிவில் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

