சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசிய அமமுக எம்.எல்.ஏ காமராஜை, பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மைக்கான 118 இடங்களைப் பெறுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்த நேரம், அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமராஜ் எம்.எல்.ஏ, விஜய்க்கு தனது ஆதரவை அளித்து கடிதம் கொடுத்ததாக தகவல் வெளியானது. இதனை டிடிவி தினகரன் மறுத்த நிலையில், தவெக தரப்பில் வீடியோவும் வெளியிடப்பட்டது. ஆனால் இதனை ஏ.ஐ. வீடியோ என மறுத்ததோடு, தவெகவுக்கு எதிராகவும் விஜய்க்கு எதிராகவும் டிடிவி தினகரன் கடுமை காட்டி பேட்டியளித்திருந்தார்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று சபாநாயகரை வாழ்த்திப் பேசிய அமமுக எம்.எல்.ஏ காமராஜ், இந்த அரசு ஐந்தாண்டு இடம்பெறவேண்டும். முதலமைச்சர் இளைஞராக இருக்கின்ற காரணத்தால் நிச்சயமாக ஒரு சிறந்த ஆட்சியை ஏற்படுத்தி தருவார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதனால்தான் உங்களை ஆதரித்துப் பேசுகிறேன். உங்கள் அரசு தொடர்வதற்கு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியிருந்தார்.
இந்தச் சூழலில் அமமுக எம்.எல்.ஏ காமராஜை கட்சியில் இருந்து நீக்கி இருப்பதாக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது.
காமராஜின் இன்றைய செயல்பாடு அவரின் வெற்றிக்காகப் பாடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
ஆகவே கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும்இ கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் காமராஜை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்
அமமுகவில் இருந்து காமராஜை நீக்கியிருப்பதன் மூலம் அவரது எம்.எல்.ஏ பதவி பறிபோக வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
