அமமுக எம்.எல்.ஏ கடிதம் என தவெக வெளியிட்டது போர்ஜரி என டிடிவி தினகரன் குற்றம்சாட்டிவரும் நிலையில், அமமுக எம்.எல்.ஏ காமராஜ் ஆதரவு கடிதம் எழுதிய வீடியோவை தவெக வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக பெரும்பான்மைக்கான 118 இடங்களைப் பெறுவதற்காக ஆதரவை திரட்டி வருகிறது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள அமமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ காமராஜ், தங்களுக்கு ஆதரவு அளித்ததாக தவெக தெரிவித்து அந்தக் கடிதத்தை வெளியிட்டது.
ஆனால், அந்தக் கடிதம் போர்ஜரி என்றும், தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாற்றியுள்ளார்.
ஆனால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏ காமராஜ் அவர்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தன் சுயநினைவுடன் மகிழ்ச்சியுடன் தான் கடிதம் எழுதியிருப்பதாக தவெக தெரிவித்துள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் அவர்கள் ஒப்புதலுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக எம்.எல்.ஏ காமராஜ் கூறியிருந்தார். ஆனால் அவர் கடிதத்தை எழுதவில்லை என்ற தகவல் பரவி வருவது உண்மைக்கு புறம்பானது மாறானது என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. இவை அனைத்தையும் மறைத்து விட்டு டிடிவி தினகரன் அவர்கள் தவறான செய்திகளை தகவல்களை தெரிவித்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவையில்லை என்பதை பொதுமக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என தவெக தெரிவித்துள்ளதோடு, காமராஜ் எம்.எல்.ஏ கடிதம் எழுதிய வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
