திருவள்ளூர் அருகே தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவால் ஏற்பட்ட விபத்தில் 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் விஜய்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் இன்று (ஜூன் 21) ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்தில் மொத்தம் 64 பணியாளர்கள் (60 பெண்கள், 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்ததாகவும், 15 பேர் அரசு மருத்துவமனையிலும், 47 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் (23 பேர் தீவிர சிகிச்சை பிரிவில், 24 பேர் கண்காணிப்பில்) சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களைச் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க அரசு செலவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் குறித்து தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, பொது சுகாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றின் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொண்டு முதற்கட்ட அறிக்கை 24 மணி நேரத்திற்குள்ளாகவும், முழுமையான அறிக்கை 3 நாட்களுக்குள்ளாகவும் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து தேவையான உதவிகளைச் செய்யவும், நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க, பேரபாய தொழிற்சாலைகளில் உடனடியாகக் குழு ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version