திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சகரணை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு இன்று காலை முதல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென  அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது.

இதனால் தொழிலாளர்கள் மூச்சு விட முடியாமல் திணறினர். மேலும் சிலருக்கு வாய், மூக்கில் ரத்தம் கசிந்ததால் பெரும் அவதிக்குள்ளாகினர்.

7 தொழிலாளர்கள் பலி

இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனையிலும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும்  அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலியின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, இருவரை கைது செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.

45க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த தொழிற்சாலையில் குளிர்சாதனப் பிரிவில் பயன்படுத்தப்படும் அமோனியா குழாயில் திடீரென கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாயு கசிந்ததும் தொழிலாளர்கள் மூச்சுத் திணறல், கண் எரிச்சல், வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் கசிதல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகினர். சிலர் உடனடியாக மயக்கமடைந்தனர். உடனடியாக தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

உரிமையாளர் கைது 

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பெண்கள் எனக் கூறப்படுகிறது. அவர்களுக்கு சுவாசப் பிரச்சினை மற்றும் இரசாயன எரிச்சல் காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பரிசோதனை நடத்தினர். கசிவை உடனடியாகக் கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழிற்சாலை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொழிற்சாலையின் உரிமையாளர் மோகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாயுக் கசிவு ஏன்?

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலை நிர்வாகம் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவில்லையா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. அமோனியா வாயு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. அதிக அளவில் உள்ளிழுக்கும் போது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் தொழிற்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்பு எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற அமோனியா கசிவு சம்பவங்களை நினைவூட்டுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version