இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய படைப்பாளியாகவும், படைப்பாளிகளின் உரிமைக்காக போராடிய முன்னோடியாகவும் பாரதிராஜாவை நினைவுகூர்ந்துள்ளதோடு, “காலத்தால் அழியாத காவிய நாயகன்” எனவும் புகழஞ்சலி செலுத்தி உள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் ,”இன்னும் ஆயிரமாண்டுகள் கழித்து தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதினாலும், அதில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய முதன்மைப் பெயர் — இயக்குநர் இமயம் பாரதிராஜா! மிகைப்படுத்தப்பட்ட கதைகளும், செயற்கையான ஒப்பனைகளும், மினுமினுக்கும் பட்டாடைகளும் உலா வந்த கற்பனைத் உலகிற்குள் தமிழ் சினிமா புதைந்து கிடந்தபோது, அதை மீட்டெடுத்த தீர்க்கதரிசி அவர். அவரது வருகைக்குப் பின், அந்தப் போலிப் பிம்பங்கள் யாவும் கனவாய் மறைந்தன.
எண்ணெய் கசியும் எதார்த்த முகங்கள், வண்ணமிழந்த பஞ்சுப் புடவையில் சுற்றித்திரிந்த எளிய கிராமத்துப் பெண்கள், திறந்த மார்போடு உழைக்கும் மனிதர்கள், நாவில் உண்மையும் கேட்டறியா வட்டார வழக்குகளும் எனத் தமிழ் திரையில் நிஜ மனிதர்களை உலவவிட்டார். கோட்டும் சூட்டுமாய் திரிந்த கதாநாயகர்களை மாற்றி, நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் கோவணமும் குதப்பிய வாயுமாய் நம் பக்கத்து வீட்டு மனிதர்களைத் திரையில் அமரவைத்தார். இவரது வரவால் தமிழ் சினிமாவின் தடம் மாறியது; அது புதுப்புது பிரதேசங்களை நோக்கிப் பயணித்தது. அதுவரை நாம் ரசிக்கத் தவறிய பொட்டல் காடுகள், பூங்காவனத்தைவிட அழகாய் காட்சியளித்தன. ‘கதை எழுதுபவர்கள் எல்லாம் கற்பனையை விடுத்து, தத்தம் மண்ணின் வாழ்வியல் பக்கங்களைத் தேடிப் படைக்கலாம்’ என்ற மாபெரும் உத்வேகத்தைத் தந்தவர் பாரதிராஜா.
அவர் ஒரு சிறந்த இயக்குநராக, படைப்பாளியாக, வழிகாட்டியாக மட்டும் திகழவில்லை; படைப்பாளிகளின் உரிமைக்காகவும் சுயமரியாதைக்காகவும் ஓங்கி ஒலித்த போர்வீரனாகத் தலைமையேற்று வழிநடத்தினார். திரையுலகிற்குப் புது ரத்தத்தைப் பாய்ச்சிய அவர்தம் பாசறை உதவியாளர்கள், இன்று கூரிய கதைகளைப் படைக்கும் போர்வீரர்களாய் கலாச்சார மாற்றத்தை நிகழ்த்தி வருகிறார்கள்.
கவியரசர் கண்ணதாசனின் வரிகளே இவருக்கு முற்றிலும் நிதர்சனம்:”நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!”
பாரதிராஜா படைத்த காவியங்கள் என்றும் காலத்தைக் கடந்து நிற்கும்; அது அவரது மரணத்தையே மறக்கச் செய்யும். அன்னாரோடு பழகியோர், படமெடுத்தோர், உரிமைகளுக்காகப் போரிட்டோர், எழுதியோர், இசையமைத்தோர், சுற்றத்தார் என அம்மாபெரும் படைப்பாளியை இழந்து தவிக்கும் ஒட்டுமொத்தத் திரையுலகின் உணர்ச்சிப் பெருவெள்ளத்தில், தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்ணீர் அஞ்சலியோடு தன் உள்ளம் கரைகிறது” எனக் கூறியுள்ளது.
