முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில், லஞ்சம் ஊழல் பெருமளவில் குறைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்த பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் விதமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். கடந்த வாரம் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் முதலமைச்சரை சந்தித்து இந்த கோரிக்கையை அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் வேண்டும் என்பது தொடர்பாக தான் விளக்கியதை முதலமைச்சர் கவனமாகக் கேட்டுக் கொண்டதாகவும், முதலமைச்சரின் பேச்சு நம்பிக்கை அளிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆளும்கட்சியாக இருந்த போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுக, தற்போது ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளது தொடர்பான கேள்விக்கு, ,ஸ்டாலினின் மனமாற்றத்தை வரவேற்பதாக அன்புமணி கூறினார்.
தமிழக பட்ஜெட்டில் 700 கோடி ஒதுக்கீடு செய்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் இரண்டு மாதத்தில் இந்த கணக்கெடுப்பை முடித்துவிடலாம்.கர்நாடகாவில் இரண்டு லட்சம் அதிகாரிகள் துணையோடு 600 கோடி செலவு செய்து அந்த கணக்கெடுப்பை நடத்தி முடித்து இருக்கிறார்கள் அதன் மூலமாக பல்வேறு சமூகங்களுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பட்டியல் சமூக மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். பின்தங்கிய சமுதாயங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுத்து அவர்களை முன்னேற்றலாம் என்று கூறினார்.
தவெக ஆட்சி எப்படி உள்ளது என்னும் கேள்விக்கு, நாளையுடன் புதிய அரசு அமைந்து ஒரு மாதம் நிறைவடைகிறது. நன்றாக செயல்படுகிறார்கள், ஊழல் பெறும் அளவில் குறைந்துள்ளது, பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, ஆட்சியாளர்கள் மாறி உள்ளனர். அதிகாரிகள் மாற நேரம் வேண்டும் என்றார்.
தனியாரிடம் மின் கொள்முதல் செய்வதன் வழியே, ஊழல் செய்ய முடியும் என்பதால் அரசு சார்பில் மின் உற்பத்தி செய்வதைக் கடந்த ஆட்சியாளர்கள் விரும்பவில்லை எனவும், திமுக ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேகதாது பிரச்சனை சம்பந்தமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை வைத்ததாகவும் இது குறித்து முடிவெடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் அன்புமணி கூறினார்.
